search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
    X
    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

    கொரோனா நிதி நெருக்கடி: அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் வெட்டு - மராட்டிய அரசு அறிவிப்பு

    கொரோனா வைரசால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை கவனத்தில் கொண்டு எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தில் 60%-மும், அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 25 முதல் 50%-மும் பிடித்தம் செய்யப்படும் என்று மராட்டிய அரசு தெரிவித்து உள்ளது.
    மும்பை:

    கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலமாக மராட்டியம் விளங்குகிறது. இங்கு கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடந்தபோதும், அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து இருப்பது அரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. பொருளாதாரம் முடங்கி போனதால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், நிதி நெருக்கடியை சமாளிக்க எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து மராட்டிய துணை முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான அஜித்பவார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிதி மந்திரி அஜித்பவார்

    கொரோனா வைரசை எதிர்த்து போராட வேண்டிய நிலை இருப்பதால், முதல்-மந்திரி, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் சம்பளத்தில் 60 சதவீதம் பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அரசு பணியாளர்கள் சம்பளத்தில் 50 சதவீதமும், 3-ம் நிலை அரசு பணியாளர்கள் சம்பளத்தில் 25 சதவீதமும் பிடித்தம் செய்யப்படுகிறது. மற்ற ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது.

    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    கொரோனா வைரசால் பொருளாதாரம் முடங்கி கிடப்பதால் அரசுக்கு நிதி ஆதாரம் இல்லை என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கு மக்கள் பிரதிநிதிகளும், அரசு ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×