search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இணையதளம் உருவாக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்

    கொரோனா குறித்த வதந்திகளை கட்டுப்படுத்தி மக்களுக்கு உண்மையான தகவல்களை தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய இணையதளத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் பிற மாநிலங்களுக்கு சென்று, தங்கி கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்த தொழிலாளர்கள், வருமானம் இன்மையால் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினார்கள். டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பினார்கள்.

    இந்த பிரச்சினை தொடர்பாக அலோக் ஸ்ரீவஸ்தவா, ராஷ்மி பன்சால் என்ற இரு வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கை நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர், வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நேற்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்தனர்.

    அதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் நேற்று மீண்டும் காணொலி காட்சி மூலம் இந்த வழக்கை விசாரித்தனர்.

    விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பிற நாடுகளை போல இன்றி இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரை அடையாளம் காண்பதற்கு முன்பே நோய் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக விரிவான நிலைத்தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகளை அடையாளம் கண்டறிந்து பட்டியல் தயாரிக்கப்பட்டது. கொரோனா நோய்க்கான அறிகுறி தென்பட்ட பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். அறிகுறிகள் தென்படாத பயணிகள் அவர்களே தங்களை சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

    தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இடம் பெயரும் தொழிலாளர்களை பொறுத்தவரை, இது போன்ற இடம் பெயர்தலை தடுத்து நிறுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இடம் பெயரும் அனைத்து தொழிலாளர்களும் 31-ந் தேதி முதல் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தொழிலாளர்களின் இடம் பெயர்வது தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது.

    கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய் தொடர்பான சரியான செய்திகளை மக்களுக்கு அளிக்கும் வகையில் தினமும் செய்தியாளர்களுக்கு தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். தற்போது கோடைகாலம் நெருங்குவதால் இந்த முகாம்களில் தண்ணீர், உணவு, மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கொரோனா நோயை விட பீதியும், அச்சமும் அதிக உயிர்களை அழிக்கும் ஆபத்து கொண்டது. எனவே, நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைத்து கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சரியான தகவல்களை மக்களிடையே பரப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் மற்றும் அனைத்து மதங்களின் தலைவர்களை கொண்டு மாநிலங்கள் அனைத்திலும் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு மன தைரியமும், கொரோனா குறித்த விழிப்புணர்வும் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மத்திய அரசு 24 நேரத்துக்குள் ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதன் மூலம் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சரியான செய்திகளை மக்களிடையே கொண்டு செல்லவேண்டும். தவறான செய்திகளையும் வதந்திகளையும் முறியடிக்கும் வகையில் அந்த இணையதளம் இயங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    நேற்று வழக்கு விசாரணையின் போது, ‘வாட்ஸ் அப்’ செயலியில் நாட்டு மக்களுக்காக உரையாடல் வசதியை ஏற்படுத்தி உள்ளதாக மத்திய அரசின் நிலை தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பற்றி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தற்போது இது நடைமுறையில் உள்ளதா? என்று கேட்டனர்.

    அதற்கு, தற்போது இந்த வசதியை வாட்ஸ்-அப்பில் தொடங்கி உள்ளதாகவும், இந்த வசதியை மேலும் மேம்படுத்த இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நீதிபதி எல்.நாகேஸ்வரராவ், ஊடகங்களுக்கு சரியான தகவல் அளிக்கும் வகையில் ஒரு விளக்க கூட்டத்தை காணொலி காட்சி மூலம் மத்திய அரசு ஏற்பாடு செய்து அதை அரசு தொலைக்காட்சி மூலம் ஏன் ஒளிபரப்பக் கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

    அத்துடன் கொரோனா தொடர்பாக தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வரும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், டிக்டாக் ஆகிய செயலிகள் வழியாகவும் உண்மையான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். 
    Next Story
    ×