search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    21 நாள் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை - மத்திய அரசு அறிவிப்பு

    ஏப்ரல் 14-ந் தேதியுடன் முடிவடைய இருக்கும் ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் திட்டம் தற்போது இல்லை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து, பிரதமர் கடந்த 25-ந் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த தனித்து இருப்பது மட்டுமே தீர்வு என்றும், இதை அலட்சியப்படுத்தினால் இந்தியா கடுமையான விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்றும், எனவே நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தார்.

    அதன்படி இந்த ஊரடங்கு உத்தரவு 25-ந் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

    இதனால் நாட்டில் மருத்துவம், குடிநீர், பால் சப்ளை உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாலும் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

    நாடு முழுவதும் மாவட்ட மற்றும் மாநில எல்லைகள் ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளன. சரக்கு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே எல்லையை கடந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

    இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவால் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிரமங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்போர், சிறு வியாபாரிகள் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார் கள்.

    பிற மாநிலங்களுக்கு சென்று அங்கு தங்கி வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் தொழிலாளர்கள் லாரி போன்ற வாகனங்களில் கூட்டம் கூட்டமாக கிளம்பிச் செல்கிறார்கள். ஏராளாமானோர் கால்நடையாக நடந்தே நீண்ட தூரம் செல்கிறார்கள்.

    அவர்களால் கொரோனா மேலும் பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும் அவர்களை தடுத்து நிறுத்துவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது.

    புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களை தனி இடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

    ஒட்டு மொத்த ஊரடங்கு நடவடிக்கை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சமுதாயத்திலும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

    அதில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு திடீரென்று 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தி இருப்பதால், மக்களிடையே அச்ச உணர்வும், பீதியும் ஏற்பட்டு இருப்பதாகவும், அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருந்தார். அத்துடன், மற்ற நாடுகளைப் போல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை அமல்படுத்துவதை தவிர்த்து வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து இருக்கலாம் என்றும் மத்திய அரசுக்கு அவர் யோசனை தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையே, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான மந்திரிகள் குழு டெல்லியில் கூடி, வெளிமாநில தொழிலாளர்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் நாட்டில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியது.

    இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து இருப்பதாலும், நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாலும், வருகிற ஏப்ரல் 14-ந் தேதியுடன் முடிவடைய இருக்கும் ஊரடங்கை மேலும் நீட்டிக்க மத்திய அரச திட்டமிட்டு இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின.

    ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு, 21 நாள் ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று அறிவித்து உள்ளது.

    இது தொடர்பாக மத்திய தகவல் மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 21 நாள் ஊரடங்கு முடிவடையும் போது அதை மத்திய அரசு நீடிக்க இருப்பதாக வதந்திகள் பரவுவதோடு, சில ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வதந்திகளும், தகவல்களும் அடிப்படை ஆதாரம் இல்லாதவை என்று மத்திய மந்திரி சபை செயலாளர் ராஜீவ் குகா மறுத்து இருக்கிறார் என்று கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×