search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை பங்குச்சந்தை
    X
    மும்பை பங்குச்சந்தை

    வட்டி குறைப்புக்கு பிறகும் பங்குச்சந்தையில் எழுச்சி இல்லை- சென்செக்ஸ் 131 புள்ளிகள் சரிவு

    ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சென்செக்ஸ் 131 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
    மும்பை:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் தொழில்துறை முடங்கி உள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன. இதன் காரணமாக நேற்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வடைந்தன. 

    இந்நிலையில் வட்டி குறைப்பு தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிடலாம் என்ற அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தில் ஏற்றம் பெற்றன. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்தன. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 1100 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 9000 புள்ளிகளை தாண்டியது.

    ரிசர்வ் வங்கி ஆளுநர் வட்டி குறைப்பு மற்றும் கடன் தவணை அவகாசம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பின்னர் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக நிலையற்ற வர்த்தகம் காணப்பட்டது. பிற்பகலுக்கு பிறகு வர்த்தகம் சரிவடைந்தது. 

    வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 131.18 புள்ளிகள் சரிந்து 29815.59 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 18.80 புள்ளிகள் சரிந்து 8660.25 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.

    மும்பை பங்குச்சந்தையில் பங்குகள் சரிவடைந்த நிறுவனங்களில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அந்த நிறுவன பங்குகள் சுமார் 9 சதவீதம் சரிந்தன. இதேபோல் ஹீரோ மோட்டோகார்ப், இந்தஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல், மாருதி, எச்.சி.எல். டெக்னாலஜி, எச்.யு.எல். டாடா ஸ்டீல், அல்ட்ரா சிமென்ட் மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன. 
    Next Story
    ×