search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    ரேஷனில் கூடுதலாக பொருட்கள், முதியோர், விதவை பென்ஷன் இருமடங்கு உயர்வு - கெஜ்ரிவால்

    கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏழை மக்களின் பொருளாதாரம் தள்ளாட்டம் போடும் நிலையில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்துவிட்டு இன்று டிஜிட்டல் கான்பிரன்சிங் மூலம் இன்று மாலை பேட்டியளித்தார்.

    கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரம் தள்ளாட்டம் போடும் நிலையில் பல்வேறு சலுகை திட்டங்களை தனது பேட்டியின்போது அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லியில் ரேஷன் கடைகளில் தற்போது 72லட்சம் மக்கள் பொருட்களை வாங்கி பலனடைந்து வருகின்றனர். அடுத்த மாதத்தில் இருந்து அவர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் 50 சதவீதம் அதிகரிக்கப்படும். அதிகரித்து தரப்படும் பொருட்கள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும்.

    இந்த மாதத்துக்கான விதவை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்படும். இதன் மூலம் 8.5 லட்சம் மக்கள் பலனடைவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், வீடில்லாத மக்கள் தங்கும் இரவுநேர காப்பகங்களில் இனி இரவு உணவும் வழங்கப்படும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் முழுஅடைப்பின்போது டெல்லியில் சுமார் 50 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும். இப்போதைக்கு ஊரடங்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கபடவில்லை. 5 பேருக்கும் அதிகமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசியம் ஏற்பட்டால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடலாம் என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×