search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    ரெயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை- மத்திய அரசு உறுதி

    ரெயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில், ரெயில்வே அமைச்சகத்தின் செயல்பாடு குறித்த விவாதத்துக்கு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    இந்திய ரெயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை என்பதை தெளிவுபட தெரிவித்து கொள்கிறேன். அதுபோன்று நடக்காது. இந்திய ரெயில்வே, நாட்டு மக்களுக்கு சொந்தமானது. அப்படியே நீடிக்கும்.

    ரெயில்வே துறையில் அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். ரெயில்வேயின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு, பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதற்காக, சில சேவைகளை தனியாரின் கீழ் கொண்டுவர உள்ளோம். ரெயில்வேயை உலகத்தரத்துக்கு கொண்டு வருவதுதான் எங்கள் லட்சியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டதற்கு மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வி‌‌ஷயத்தில் கடுமையான கொள்ளை நடப்பதாக தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.

    பின்னர், உற்பத்தி வரி உயர்வை கண்டித்து, காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் பரவலால், சுற்றுலா துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

    அதற்கு பதில் அளித்து மத்திய சுற்றுலா துறை மந்திரி பிரகலாத் சிங் படேல் பேசினார். அப்போது அவர், கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்கவே அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதனால் சுற்றுலா துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி, பிறகுதான் ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.

    கம்பெனி சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாக்குர் தாக்கல் செய்தார்.

    கம்பெனிகள் செய்யும் சிறிய மற்றும் தொழில்நுட்ப தவறுகளை கிரிமினல் குற்றங்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான மசோதா என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    Next Story
    ×