search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    தமிழ் மொழி தொடர்பான துணைக்கேள்வியை அனுமதிக்காத சபாநாயகருக்கு ராகுல் கண்டனம்

    பாராளுமன்றத்தில் இன்று தமிழ் மொழி தொடர்பான துணைக்கேள்வியை அனுமதிக்காத சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழக மக்களை அவமதித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழி தொடர்பான கேள்விக்கு பின்னர் தி.மு.க. உறுப்பினர் துணைக்கேள்வியை எழுப்பியபோது அதற்கு அனுமதி அளிக்காத சபாநாயகர் ஓம் பிர்லா, மற்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கி தந்தார்.

    இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு தங்களது துணைக்கேள்விக்கு உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராவ் பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவையில் இருந்த ராகுல் காந்தியும் தி.மு.க. உறுப்பினர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.

    எனினும், அனுமதி கிடைக்காததால் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா தமிழக மக்களை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவு

    பாராளுமன்றம் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, 'நேற்று மக்களவையில் நான் எழுப்பிய ஒரு துணை கேள்விக்கு அனுமதி அளிக்க சபாநாயகர் மறுத்து விட்டார். இன்று அதே நிலைமை தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் ஆகும்’ என குறிப்பிட்டார்.

    தங்களது மொழியை பாதுகாக்கவும் பேசுவதற்குமான எல்லா உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. தமிழ் மொழி தொடர்பான துணைக்கேள்வியை அனுமதிக்காததன் மூலம் தமிழக மக்களின் உரிமைகளை சபாநாயகர் ஓம் பிர்லா பறித்து விட்டார். இது தமிழ்நாட்டு மக்களின் மீதும் அவர்களின் மொழியின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் ராகுல் தெரிவித்தார்.

    பின்னர், தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் ‘தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியையும் பாராளுமன்றத்தின் மரபுகள் மீறப்படுவதையும்  நான் கடுமையாக எதிர்க்கிறேன்’ என கூறியுள்ளார்.
    Next Story
    ×