search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி
    X
    சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி

    குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா

    பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல் பரபரப்புக்கு இடையில் குஜராத்தில் இன்று மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில், முதல்-மந்திரி விஜய் ருபானி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.
     
    இந்த தேர்தலில் 3 இடங்களுக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.  அக்கட்சியின் சார்பில், அபய் பரத்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமீன் ஆகியோர் மாநிலங்களவை வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, 2 இடங்களுக்கு மூத்த தலைவர்களான சக்தி சிங் கோஹில், பரத்சிங் சோலங்கி  ஆகியோரை வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

    குஜராத் சட்டசபை கூட்டம்

    மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி ஏற்றுக்கொண்டு விட்டார்.

    இதற்கன அறிவிப்பை 16-ந் தேதி (இன்று) சட்டசபையில் வெளியிடுவேன் என அவர் தெரிவித்தார்.

    இதன் மூலம் சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 69 ஆக குறைந்தது. இந்நிலையில், இன்று மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்திருப்பதாகவும் அவரது ராஜினாமாவும் ஏற்கப்பட்டதாகவும் சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி சட்டசபையில் அறிவித்தார்.

    குஜராத் சட்டசபையில் மொத்த இடங்கள் 182 ஆகும். இதில் 2 இடங்கள் காலியாக இருந்தன. தற்போது 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால் சட்டசபையின் பலம் 175 ஆக குறைந்துள்ளது.

    தற்போதைய நிலவரத்தின்படி குஜராத் சட்டசபையில் கட்சிகள் பலம் வருமாறு:-

    மொத்த இடங்கள் - 182

    பாரதீய ஜனதா - 103

    காங்கிரஸ் - 68

    தேசியவாத காங்கிரஸ் கட்சி - 1

    பாரதீய பழங்குடி கட்சி - 2

    சுயேச்சை - 1

    காலி இடங்கள் - 6
    Next Story
    ×