search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தரிப்பு படம்
    X
    சித்தரிப்பு படம்

    காரில் செல்வதை விட மலிவான செலவில் விமானத்தில் பறக்கலாம் - ஆம் ஆத்மி கிண்டல்

    பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியுள்ள நிலையில் காரில் செல்வதை விட மலிவான செலவில் விமானத்தில் பறக்கலாம் என ஆம் ஆத்மி கட்சி குறிப்பிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையை பெருமளவு குறைக்க வேண்டும் என ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால், பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தும் அளவிற்கு மத்திய அரசு கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் 39 ஆயிரம் கோடி ரூபாய் உபரி வருமானம் ஈட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி,  சென்னையில்  ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 57 காசுகளுக்கும், டீசல் 66 ரூபாய் 2 காசுகளுக்கும் விற்பனை ஆனது.

    இந்நிலையில், பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியுள்ள நிலையில் காரில் செல்வதை விட மலிவான செலவில் விமானத்தில் பறக்கலாம் என ஆம் ஆத்மி கட்சி குறிப்பிட்டுள்ளது.

    ராகவ் சத்தா

    இதுதொடர்பாக, டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளதாவது:-

    கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 12 முறை உயர்த்தியுள்ளது.

    இன்றைய காலக்கட்டத்தில் உள்ள நமது பொருளாதர நிலவரத்தின்படி, வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் விலையைவிட விமானத்துக்கு பயன்படுத்தும் பெட்ரோலின் விலை மலிவாக உள்ளது.
    எனவே, காரில் பயணிப்பதை விட விமானத்தில் பறப்பது மலிவாக உள்ளது எனலாம்.

    கடந்த 15 ஆண்டுகளாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்துள்ள நிலையில் நமது நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார மந்தநிலை போன்றவை மிகவும் மோசமான கட்டத்துக்கு சென்றுள்ளது.

    சர்வதேச அளவில் பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும் நம் நாட்டில் பெட்ரோல் விலை உயர்வின் மூலம் மத்திய அரசு அடைந்த லாபத்தொகையான சுமார் 16 லட்சம் கோடி ரூபாயை மக்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும்.

    இனி பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை 39 ரூபாய் 76 காசுகளுக்கும் ஒரு லிட்டர் டீசலை 31 ரூபாய் 58 காசுகளுக்கும் வழங்க வேண்டும்.  

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×