search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான்
    X
    காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான்

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் பெருமளவு குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தும் அளவிற்கு மத்திய அரசு கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், தற்போதைய எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் எதிர்கால போக்கு ஆகியவற்றை கணித்து எண்ணெய் நிறுவனங்கள் அவற்றுக்கு ஏற்ப சரிசெய்திருப்பதால், தற்போதைய வரி உயர்வினால் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் தாக்கம் ஏற்படாது என தொழில்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதால் ஏற்படும் ஆதாயத்தின் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறியதாவது:-

    பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 22.98 ஆகவும், டீசலுக்கு ரூ.18.83 ஆகவும் உயர்ந்துள்ளது. 2014 ல் மோடி அரசு பதவியேற்றபோது பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்தது, டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.3.56  என்ற அளவில் இருந்தது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு மத்திய கலால் வரி 12 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்


    மோடி- அமித் ஷா அரசாங்கம் கலால் வரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு பெருமளவில் வரி விதிப்பதன் மூலம் மக்களைக் கொள்ளையடிக்கிறது. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியபோதும், ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரவில்லை.

    கடந்த 6 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்த போதிலும், இந்த அளவிற்கு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உயர்த்தப்பட்டதற்கு பாஜக அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகள் தான் காரணம்.

    கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் கிடைக்கும் ஆதாயம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைந்தது 35 முதல் 40 சதவீதம் வரை குறைக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×