search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்துறை மந்திரி அமித் ஷா
    X
    உள்துறை மந்திரி அமித் ஷா

    டெல்லி கலவரத்தில் தொடர்புடையவர்களை விடமாட்டேன் - அமித் ஷா விளக்கம்

    மக்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசுகையில், டெல்லி கலவரத்தில் தொடர்புடையவர்களை விடமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி வன்முறை குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மக்களவையில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அங்கு நடந்த வன்முறை துரதிருஷ்டவசமானது; இதை அரசியலாக்கக் கூடாது.

    பிப்ரவரி 25-ம் தேதி இரவு 11 மணிக்கு பின்டெல்லியில் வன்முறை எதுவும் நடக்கவில்லை. ஆனால், அதை வைத்து அரசியல் செய்வது மட்டும் தொடர்கிறது.

    வன்முறையின்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் முயற்சித்தனர். வன்முறை மேலும் பரவாமல் தடுத்தனர். அமைதியை நிலைநாட்டுவதே எங்கள் நோக்கமாக இருந்தது. 36 மணி நேரத்துக்குள் நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிகழ்ச்சி முன்னதாகவே திட்டமிடப்பட்டது. அவர் தாஜ்மஹால் சென்றபோது, அவருடன் நான் செல்லவில்லை. அவர் கலந்து கொண்ட எந்த நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொள்ளவில்லை.

    அப்போது, போலீசாருடன் கலந்தாலோசித்து, டெல்லி நிலைமையை கண்காணித்து வந்தேன். பல ஆலோசனை கூட்டங்களையும் நடத்தினேன். வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிடும்படி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலிடம் வலியுறுத்தினேன். வன்முறை பகுதிகளுக்கு நான் சென்றால், அங்கு போலீசாரின் பணிக்கு இடையூறு ஏற்படும் என்பதால், நான் அங்கு செல்லவில்லை. 

    வன்முறை பகுதிகளில் இரு சமுதாய மக்களும் வசித்தனர். வன்முறையில் ஒரு தரப்பினர் மட்டும் பாதிக்கப்பட்டனர் எனக்கூறுவது தவறு; இரு மதத்தை சேர்ந்த மக்களும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

    அமித் ஷா பேசிக் கொண்டிருக்கும் போதே, அவரது பதிலை ஏற்க மறுத்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    தொடர்ந்து பேசிய அமித் ஷா, விளக்கம் அளிக்கும்போது, எதிர்க்கட்சிகள் பொறுப்பில்லாமல் வெளிநடப்பு செய்வது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

    உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வன்முறையை பரப்புவது சாத்தியமில்லை. எதிர்க்கட்சிகளின் பேச்சு வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்தது. வன்முறை சம்பவம் முன்னதாகவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில்தான் நாட்டில் அதிக வன்முறை நடந்தது என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×