search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்பயா குற்றவாளிகள்
    X
    நிர்பயா குற்றவாளிகள்

    நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி - நாளை தூக்கிலிடுவது உறுதி?

    நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்தார்.
    புது டெல்லி:

    நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளையும் மார்ச் 3-ம் தேதி (நாளை) தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பவன் குமார் குப்தாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
     
    சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறிவரும் குற்றவாளி பவன் குமார் குப்தாவின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்ட நிலையில் தற்போது கடைசி சட்ட வாய்ப்பான மறு சீராய்வு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

    மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட அக்‌ஷய் சிங் மற்றும் பவன் குமார் குப்தா ஆகியோர் தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் இருந்து தடை விதிக்கக்கோரி டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து, பவன் குமார் குப்தா சார்பில் ஜனாதிபதியிடம் இன்று கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், பவன் குமார் குப்தாவின் கருணை மனுவை உடனடியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்தார். இதன்மூலம் நிர்பயா குற்றவாளிகள் நாளை காலை 6 மணியளவில் தூக்கிலிடப்படலாம் என்பது உறுதியாகிவிட்டது.



    Next Story
    ×