search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கேரளாவில் மரணம் அடைந்த வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இல்லை

    கேரளாவில் மரணம் அடைந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று புனே ஆய்வக அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

    கேரள மாநிலம் எர்ணா குளம் பகுதியைச் சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்தார். அங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட வாலிபர் கடந்த 28-ந்தேதி கேரளா திரும்பினார். கொச்சி விமான நிலையத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    அப்போது வாலிபருக்கு காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே அவரை சுகாதார அதிகாரிகள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தனிவார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. 2 ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆலப்புழா மற்றும் புனேயில் உள்ள தேசிய ரத்த பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது.

    ஆலப்புழா சோதனை கூடத்தில் இருந்து வந்த முடிவில் வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. புனே தேசிய ஆய்வுக்கூடத்தில் இருந்து முடிவு வருவதற்கு முன்பு வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனால் அந்த வாலிபர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தாரா? என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. எனவே புனே ஆய்வக அறிக்கை வந்த பிறகே இது பற்றி இறுதி முடிவு தெரிய வரும் என்று கூறினர்.

    இந்த நிலையில் நேற்று புனேயில் இருந்து வாலிபரின் ரத்த பரிசோதனை அறிக்கை முடிவுகள் வந்தது. அதில் வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை, என தெரிய வந்தது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை யாரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியாகவில்லை, என்று தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×