search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரன்வீர் குர்ஜர்
    X
    ரன்வீர் குர்ஜர்

    மாற்றுத்திறனாளியை காப்பாற்றி உயிரைவிட்ட பாதுகாப்பு படை வீரர்

    ரெயில் விபத்தில் மாற்றுத்திறனாளியை காப்பாற்றிவிட்டு ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் உயிரை விட்ட பரிதாப சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.
    மும்பை :

    மும்பை தாக்குர்லியில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை தலைமையகத்தில் பணியாற்றி வந்தவர் ரன்வீர் குர்ஜர்(வயது27). இவர் சம்பவத்தன்று இரவு பாந்திரா ரெயில்நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். இரவு 10.45 மணியளவில் பாந்திரா- மாகிம் இடையே தண்டவாளத்தில் ரோந்து சென்றார்.

    அப்போது, மின்சார ரெயில் வருவதை கவனிக்காமல் மாற்றுத்திறனாளி ஒருவர், தண்டவாளத்தில் சென்று கொண்டு இருந்தார். இதை கவனித்த ரன்வீர் குர்ஜர் ஓடிச்சென்று துரிதமாக செயல்பட்டு அவரை தண்டவாளத்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    இதற்கிடையே ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் ரன்வீர் குர்ஜர் தண்டவாளத்தில் இருந்து விலகி செல்வதற்குள் மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை சக வீரர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரெயில்வே பாதுகாப்பு படை வீரரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளியை காப்பாற்றி ரன்வீர் குர்ஜர் உயிரைவிட்ட உருக்கமான சம்பவம் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரன்வீர் குர்ஜரின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் பஞ்சோலி கிராமம் ஆகும். திருமணமான இவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×