search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுபான்மை விவகாரத்துறை மந்திரி நவாப் மாலிக்
    X
    சிறுபான்மை விவகாரத்துறை மந்திரி நவாப் மாலிக்

    மராட்டியத்தில் முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு - மந்திரி நவாப் மாலிக் அறிவிப்பு

    மராட்டியத்தில் கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மேல்-சபையில் மந்திரி நவாப் மாலிக் அறிவித்தார்.
    மும்பை:

    மராட்டிய சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.இந்த நிலையில், மராட்டியத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு முடிவு செய்து உள்ளது.

    இதை நேற்று மேல்-சபையில் சிறுபான்மை விவகாரத்துறை மந்திரி நவாப் மாலிக் (தேசியவாத காங்கிரஸ்) அறிவித்தார். இது தொடர்பான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று அவர் கூறினார். பள்ளிகளில் சேர்க்கை தொடங்குவதற்கு முன்னர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.காங்கிரஸ் உறுப்பினர் சரத் ரான்பைஸ் எழுப்பிய கேள்விக்கு மந்திரி நவாப் மாலிக் இந்த பதிலை தெரிவித்தார்.

    இதற்கிடையே முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உரிய முடிவை உரிய நேரத்தில் எடுப்பார் என்று நிருபர்களிடம் சிவசேனா மூத்த தலைவரும், நகர வளர்ச்சித்துறை மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

    சிவசேனா மந்திரியின் கருத்து புதிய குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், மேல்-சபை கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த தேசியவாத காங்கிரஸ் மந்திரி நவாப் மாலிக்கிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர், ‘‘மேல்-சபையில் நான் கூறியபடி முஸ்லிம்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு வழங்குவதை அரசு உறுதியாக நிறைவேற்றும். முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஐகோர்ட்டு ஏற்கனவே அனுமதி அளித்து உள்ளது” என்று பதிலளித்தார்.

    மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு, முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க அனுமதி மறுத்தது. ஆனால் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பு அளித்தது.இதையடுத்து ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை சுட்டிக்காட்டி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று கைவிரித்து விட்டது.தற்போது மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு முடிவு செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
    Next Story
    ×