search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயம்
    X
    மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயம்

    மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயம்: மசோதா நிறைவேறியது

    மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா மேல்-சபையை தொடர்ந்து சட்டசபையிலும் நிறைவேறியது. இதில் 7-ம் வகுப்பில் சேரும் வெளிமாநில மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்தது.

    பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த மசோதா நேற்றுமுன்தினம் மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேறியது.

    இந்த நிலையில், மராத்தி மொழி தினமான நேற்று இந்த மசோதாவை சட்டசபையில் மராத்தி மொழித்துறை மந்திரி சுபாஷ் தேசாய் அறிமுகம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் மராத்தி பாடத்தை கட்டாயமாக்கும் இந்த மசோதா தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மராத்தி பாடத்தை கற்பிப்பதையும், கற்பதையும் கட்டாயமாக்கும். 2020-2021-ம் கல்வியாண்டில் இருந்து படிப்படியாக 1 முதல் 10 -ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கட்டாய பாடமாக மாறும். இதன்படி முதலில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் மராத்தி மொழிப்பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்படும்.

    ஏதாவது ஒரு மாணவர் அல்லது ஒரு வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த சட்டத்தின் அனைத்து அல்லது ஏதேனும் ஒரு விதிகளில் விலக்கு அளிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கும். அதன்படி வெளிமாநிலத்தில் இருந்து வரும் மாணவர்கள் 7-ம் வகுப்பில் சேரும் போது அவர்களுக்கு மராத்தி மொழி பாடத்தில் இருந்து விலக்கு அளிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

    இந்த மசோதாவின் விதிமுறைகளுக்கு இணங்காத பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், அதில் விலக்கு அளிக்கும் பிரிவுக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

    இந்த சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டு உள்ள விலக்கு தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

    பள்ளிகளுக்கு விதிக்கப்படும் ரூ.1 லட்சம் அபராதம் மிகக் குறைவு. பல பள்ளிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றன. ரூ.1 லட்சம் அபராதம் செலுத்துவது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது.

    தொடர்ச்சியாக இந்த சட்ட விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு மீண்டும் அபராதம் விதிக்க எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது பதிலளித்த மந்திரி சுபாஷ் தேசாய், இந்த மசோதாவின் கீழ் உருவாக்கப்பட்ட விதி விலக்கு தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதை அரசு உறுதி செய்யும் என்றார்.

    இருப்பினும் அவரது விளக்கத்தில் திருப்தி அடையாத தேவேந்திர பட்னாவிஸ், இந்த மசோதாவில் வெளிமாநில மாணவர்களுக்காக அளிக்கப்பட்டு இருக்கும் விலக்கை போன்ற நடைமுறை தென் மாநிலங்களில் இல்லை. வெளிமாநிலத்தில் இருந்து மராட்டியத்துக்கு வரும் மாணவர்கள் மராத்தி மொழியை கற்கக்கூடாதா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு மந்திரி சுபாஷ் தேஷாய் பதிலளிக்கையில், “7-ம் வகுப்பில் வந்து சேரும் வெளிமாநில மாணவர்கள், இங்கு 1-ம் வகுப்பில் இருந்து மராத்தி மொழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதால், இந்த விலக்கு அளிக்கப்படுகிறது” என்றார்.

    பின்னர் சட்டசபையில் ஒருமனதாக இந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு விரைவில் கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஒப்புதல் அளித்ததும் அது சட்டமாக மாறும்.
    Next Story
    ×