search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி
    X
    டொனால்டு டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி

    அமெரிக்கா-தலிபான் அமைதி ஒப்பந்த நிகழ்ச்சியில் இந்தியாவும் பங்கேற்பு

    அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற உள்ள அமைதி ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் இந்திய தூதர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வந்தனர்.

    மேலும், பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றினர். இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 

    இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ஆப்கானிஸ்தான் அரசு படையினரும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை நடத்தினர். இதற்கு தலிபான் பயங்கரவாதிகள் நடத்திவரும் தாக்குதல்களில் 2 ஆயிரத்து 400-க்கும் அதிகமான அமெரிக்க படை வீரர்களும் உயிரிழந்தனர். 

    தலிபான் - அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை (கோப்பு படம்)

    இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையை நடத்தினர். 

    கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே சுமூக முடிவு எட்டப்பட்டது. 

    மேலும், இரு தரப்பினருக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் தோகாவில் நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஷியா, ஈரான் உள்ளிட்ட உலகின் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

    இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலிபான் பிரதிநிதிகள் இடையே நாளை கையெழுத்தாக உள்ள அமைதி ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் தூதர்களும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    கத்தார் நாட்டின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தலிபான்கள் தொடர்பான விவகாரத்தில் இந்தியா முதல்முறையாக நேரடி தொடர்பில் ஈடுபட்டுள்ளது இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×