search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி பாடம் கட்டாயம்
    X
    மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி பாடம் கட்டாயம்

    மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி பாடம் கட்டாயம்

    மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மராத்தி பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா மேல்-சபையில் நிறைவேறியது. சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறினார்.
    மும்பை :

    மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மராத்தி பாடத்தை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பள்ளிகளில் மராத்தியை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படிபட்ஜெட் கூட்டத்தொடரின் 3-வது நாளான நேற்று சட்டசபையில் பேசிய மாநில பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட், மராட்டியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா நாளை(இன்று) தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார்.

    மேலும் அவர் பேசுகையில், ஐ.பி., ஐ.சி.எஸ்.இ. மற்றும் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து கல்வி வாரியங்களுடனும் ஆலோசித்த பின்னர் பரஸ்பர புரிந்துணர்வு மூலம் பள்ளிகளில் மராத்தி பாடத்தை கட்டமாயமாக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. தென் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் உள்ளூர் மொழிகளை கற்பிப்பதில் பின்பற்றப்படும் முறையையும் அரசாங்கம் ஆய்வு செய்துள்ளது என்றார்.

    இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சிவசேனா எம்.எல்.ஏ. பாஸ்கர் ஜாதவ், தென்மாநில பள்ளிகளில் உள்ளூர் மொழி கற்பிக்கும் முறையை ஆய்வுசெய்ய வேண்டியதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பினார். மராட்டிய அரசின் நிலைப்பாடு குறித்து கல்வி மந்திரி பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்த மந்திரி வர்ஷா கெய்க்வாட், பள்ளிகளில் மராத்தி பாடத்தை கட்டாயமாக்குவதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாக தான் ஏற்கனவே கூறியதாக தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சுதீர் முங்கண்டிவார், மராத்தியில் சட்டசபை நடவடிக்கைகளை நடத்துவதற்கு சபை விதிகளை மாற்றவேண்டும். சட்டசபை தற்போதைய விதிகள் மராத்தி, ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் நடத்தப்படலாம் என்று கூறுகிறது, என்றார்.

    இதற்கு, சபாநாயகர் நானா படோலே சட்டசபை விதிகள் குறித்த சுதீர் முங்கண்டிவாரின் கேள்விக்கு பின்னர் பதிலளிப்பதாக கூறினார்.

    இதற்கிடையே அனைத்து பள்ளிகளில் மராத்தி பாடத்தை கட்டாயமாக்குவதற்கான மசோதா மேல்-சபையில் ஒருமனதாக நிறைவேறியது.

    பொதுவாக ஒரு மசோதா சட்டசபையில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும். பின்னர் அது மேல்-சபை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இருப்பினும், இந்த மசோதாவை பொறுத்தவரை மேல்சபை தலைவர், பள்ளிக்கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட்டை முதலில் மேல்-சபையில் அறிமுகப்படுத்த அனுமதித்தார்.

    இந்த மசோதாவின் படி, விதிமுறைகளுக்கு இணங்காத பள்ளிகளுக்கு ரூ .1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    மேல்-சபையில் இந்த மசோதா நிறைவேறியதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மகிழ்ச்சி தெரிவித்தார். மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவேன் என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×