search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    அமெரிக்காவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்- பிரதமர் மோடி தகவல்

    அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பல்வேறு துறை விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

    முதலில் டிரம்பும், மோடியும் தனியாக பேச்சு நடத்தினார்கள். வர்த்தகம், ராணுவம் மற்றும் இரு நாட்டு ராஜ்ஜிய உறவுகள் குறித்து விவாதித்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் குழு அளவிலான பேச்சு நடத்தப்பட்டது. அதன்பின்னர் டிரம்பும், மோடியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி பேசியதாவது:-

    கடந்த 6 மாதங்களில் நானும் டிரம்பும் 6 முறை சந்தித்து பேசி உள்ளோம். இந்தியாவும் அமெரிக்காவும் 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நட்பு நாடுகள். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்க்கின்றன. 

    மோடி, டிரம்ப் முன்னிலையில் பேச்சுவார்த்தை

    இன்றைய பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து பேசினோம். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது என்பது நட்புறவின் முக்கிய அம்சமாகும். 

    வர்த்தகத் துறையில் முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தினோம், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். எங்கள் வர்த்தக அமைச்சர்கள் வர்த்தகம் குறித்து சாதகமான பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு எங்கள் குழுக்கள் சட்ட வடிவத்தை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் இருவரும் முடிவு செய்துள்ளோம். ஒரு மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். வெளிப்படையான, சீரான வர்த்தகத்தில் இரு நாடுகளும் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம். 

    எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி தொடர்பாகவும் பேசினோம். மீண்டும் இந்தியாவுக்கு வரும்படி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளேன். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    டிரம்ப்

    அதன்பின்னர் டிரம்ப் பேசியதாவது:-

    இன்றைய சந்திப்பானது இரு நாட்டிற்கும் முக்கியமான சந்திப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது. இருநாட்டு மக்களையும் பாதுகாப்பது குறித்து மோடியுடன் விவாதித்தேன். தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து இருவரும் நீண்ட விவாதம் நடத்தினோம். இரு நாடுகளும் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயாராகி வருகிறோம்.

    பொருளாதார உறவு குறித்துதான் பிரதானமாக பேசினோம். இந்தியாவில் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பிரதிநிதியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்தியா-அமெரிக்கா உறவு இதுவரை இல்லாத அளவிற்கு வலுப்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள் வழங்குவதற்காக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்துள்ளோம். 

    இணையதள பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம்.  போதை தடுப்பு மையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு டிரம்ப் பேசினார்.

    Next Story
    ×