search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகரெட்
    X
    சிகரெட்

    21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி சிகரெட் விற்பனை இல்லை- மத்திய அரசு புதிய சட்டம்

    21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கக்கூடாது என்றும், பொது இடத்தில் புகை பிடித்தால் வசூலிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    புகையிலை பொருட்களால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவுவதால் அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கோவில்கள், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் போன்றவை அமைந்துள்ள இடத்தில் குறிப்பிட்ட தூரம் வரை புகையிலை பொருட்கள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இப்போது மேலும் சில கட்டுப்பாடுகளை இதில் கொண்டுவருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    மத்திய அரசு

    இது சம்பந்தமாக ஆய்வு நடத்துவதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு குழு ஒன்று அமைத்து இருந்தது. அந்த குழுவினர் விரிவான ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

    அதில் பல்வேறு சிபாரிசுகளை வழங்கி இருக்கிறார்கள். ஏற்னவே 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள் விற்கக்கூடாது என்று தடை இருக்கிறது. அதை 21 வயதாக அதிகரிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றால் குறிப்பிட்ட அபராதம் விதிப்பது அமலில் உள்ளது. இந்த அபராத தொகையை இன்னும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.

    பொது இடத்தில் புகை பிடித்தால் அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. அதையும் இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    புகையிலை பொருள் விற்பனை விதிமுறைகளிலும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

    இந்த சிபாரிசுகளை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இது சட்டமாக கொண்டு வரப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்படும்.

    Next Story
    ×