search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி அமுல்யாவை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்வதை படத்தில் காணலாம்.
    X
    மாணவி அமுல்யாவை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்வதை படத்தில் காணலாம்.

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவி கைது

    பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவியால் பரபரப்பு உண்டானது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெங்களூரு:

    பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல, பெங்களூரு சுதந்திர பூங்காவிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா, மேலும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஓவைசி எம்.பி.யும் அழைக்கப்பட்டு இருந்தார்.

    போராட்டத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஓவைசி எம்.பி., மாநகராட்சி கவுன்சிலர் இம்ரான் பாட்ஷா மற்றும் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு கல்லூரி மாணவியை, மேடைக்கு வந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேச அழைத்தனர்.



    இந்த நிலையில், மேடையில் ஏறிய அந்த மாணவி திடீரென்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் வாழ்க, வாழ்க... என்று கோஷமிட்டபடி இருந்தார். அந்த மாணவி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதை கேட்டதும் மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஓவைசி எம்.பி. உள்ளிட்டோர் மாணவியின் அருகே சென்று, அவர் கையில் இருந்த மைக்கை பிடுங்க முயன்றனர். ஆனால் அவர் மைக்கை கொடுக்க மறுத்து விட்டார். மாறாக இந்தியாவுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டார். ஆனாலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவி கோஷமிட்டதால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவரை பிடித்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    பின்னர் உப்பார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்த அமுல்யா லியோனா(வயது 19) என்பதும், கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து வருவதும் தெரிந்தது. மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் அவர் கலந்து கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. என்றாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமுல்யா கோஷமிட்டதால், அவர் மீது உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓவைசி எம்.பி. அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றார். அவரை, அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து, அவர் மேடைக்கு திரும்பி வந்தார்.

    பின்னர் ஓவைசி எம்.பி. பேசுகையில், "குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தை சிலர் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். நாம் அனைவரும் இந்தியர்கள். நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவது தவறானது. அந்த இளம்பெண் எதற்காக பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டார் என்பது தெரியவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு தான் இங்கு கூடியுள்ளோம். அந்த இளம்பெண்ணை பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவதற்கு அழைத்து வரவில்லை," என்றார்.

    இதுபற்றி பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் முகர்ஜி கூறுகையில், ‘சுதந்திர பூங்காவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

    இந்த சம்பவம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்திலும், பெங்களூருவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×