search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்மோகன் சிங்
    X
    மன்மோகன் சிங்

    பொருளாதார வீழ்ச்சியை மோடி அரசு ஒத்துக்கொள்ள விரும்பவில்லை- மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

    இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி நிலையில் உள்ளது என்பதை இப்போது உள்ள மத்திய அரசு ஒத்துக்கொள்ள மறுக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    திட்டக்கமி‌ஷன் முன்னாள் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா எழுதிய பொருளாதார புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது.

    அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி

    இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி நிலையில் உள்ளது. ஆனால் இப்போது உள்ள மத்திய அரசு வீழ்ச்சி என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

    இது நமது நாட்டுக்கு நல்லது அல்ல. அதாவது நீங்கள் சந்திக்க கூடிய பிரச்சனையை அடையாளம் காண மறுத்தால் நீங்கள் அதற்கு நம்பகமான நடவடிக்கையை எடுக்க விரும்பவில்லை என்று அர்த்தம். இதன்மூலம் அதில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய முடியாத நிலை ஏற்படும்.

    2024-25 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ. 350 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்தப்போவதாக கூறியிருக்கிறார்கள். இது அவர்களுடைய விருப்பம்.

    ஆனால் தற்போது நிதி பற்றாக்குறை 9 சதவீதமாக இருக்கிறது. இது அதிகப்படியான பற்றாக்குறை ஆகும். இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 9-லிருந்து 10 சதவீதம் வரை செல்வதற்கு இது தடையாக அமைந்து விடும்.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதம் அளவிற்கு கொண்டு வருவதற்கு சாத்தியம் இருக்கிறது. ஆனால் நிதிக்கொள்கையில் மறுசீரமைப்பு செய்வதுடன் தைரியமான முறையில் வரி சீரமைப்புகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும்.

    1991-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது நிதி மந்திரியாக நான் இருந்தேன். அந்த நேரத்தில் பொருளாதார நிலை கடும் சிக்கலில் இருந்தது. மேலும், அரசு பொருளாதார சீரமைப்பை ஏற்படுத்த தாராள மயமாக்கம் திட்டத்தை கொண்டு வந்தது.

    அப்போது வர்த்தக துறை மந்திரியாக இருந்த ப. சிதம்பரம் மற்றும் மான்டேக்சிங் அலுவாலியா போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டு பொருளாதார சீரமைப்பை சரியாக செயல்படுத்தினார்கள்.

    அந்த நேரத்தில் தொழில் துறையினர் ஒன்றுகூடி தாராள மயமாக்கத்தை எதிர்த்தார்கள். பல்வேறு துறையில் இருந்தும் எங்களுக்கு எதிர்ப்பு வந்தது. ஆனாலும் அதை வெற்றி பெற செய்தோம்.

    மேலும் இந்திய பணமதிப்பில் மாற்றங்களை கொண்டு வந்தோம். அப்போதும் ஏராளமான எதிர்ப்புகள் வந்தன. அப்போதைய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனும் கூட இதை எதிர்த்தார். நான் அவரை சந்திக்க சென்ற போது, இந்த அரசு இன்னும் நம்பிக்கை ஓட்டெடுப்பை கூட நிறைவேற்றவில்லை.

    இந்த சூழ்நிலையில் இதுபோன்ற சிக்கலான முடிவுகளை ஏன் எடுக்கிறீர்கள் என்று ஆர். வெங்கட்ராமன் என்னிடம் கேட்டார். அதற்கு நான் நம்பிக்கை ஓட்டெடுப்பு வரை காத்திருக்க முடியாத அவசரம் இருக்கிறது. இதை தள்ளிப்போட்டால் அதன்பிறகு சிக்கலில் இருந்து மீள்வது கஷ்டம் என்று கூறினேன். ஆனால் அது நல்லபடியாக முடிந்தது.

    இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.
    Next Story
    ×