search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்யானந்தா
    X
    நித்யானந்தா

    நித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் - ராம்நகர் கோர்ட் உத்தரவு

    சாமியார் நித்யானந்தாவை உடனடியாக கைது செய்யவேண்டும் என கர்நாடகாவில் உள்ள ராம்நகர் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    பெங்களூரு:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் இருந்த 2 பெண் சீடர்கள் மாயமானது தொடர்பாக சாமியார் நித்தியானந்தா மீது அம்மாநில போலீசில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குழந்தைகளை கடத்திச்சென்று அவர்களை கட்டாயப்படுத்தி ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்யும் வேலையில் ஈடுபடுத்தியதாகவும் அவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

    இதையடுத்து, சாமியார் நித்தியானந்தாவை குஜராத் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவை விட்டு தப்பிச்சென்று ஈக்குவடார் நாட்டிற்கு அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் புதிதாக நாடு ஒன்றை உருவாக்கி உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

    இதற்கிடையில், பெங்களூரு அருகே பிடதியில் நித்தியானந்தாவுக்கு தியான பீட ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் புகாரில் நித்யானந்தா கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு ராம்நகர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டுவந்தது. ஆனால் அவருக்கு பெங்களூரு கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    ஜாமீன் வழங்கப்பட்டாலும் ராம்நகர் கோர்ட்டில் நடைபெற்றுவந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நித்யானந்தாவுக்கு தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 5-ந்தேதி கர்நாடகா ஐகோர்ட் நித்யானந்தாவுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து ராம்நகர் கோர்ட் நித்யானந்தாவை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. நித்யானந்தாவை கைது செய்வதற்கான பிடிவாரண்டும் கோர்ட் வழங்கியது.

    குஜராத் போலீசும் நித்தியானந்தாவை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில் சரவதேச போலீஸ் அமைப்பான ‘இண்டர்போல்’ நித்தியானந்தாவுக்கு 'புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×