search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிசிடிவி வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    சிசிடிவி வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    போலீஸ் அடித்ததால் பைக்கிற்கு தீவைத்த மாணவர் - வைரல் சிசிடிவி வீடியோவை நம்பலாமா?

    போலீஸ் அதிகாரிகள் தாக்குதலில் சிக்கிய மாணவர் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்ததாக வைரலாகும் சிசிடிவி வீடியோ காட்சிகளின் உண்மை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில், போலீஸ் தாக்குதலில் காயமுற்ற மாணவர் அருகாமையில் உள்ள மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. வைரல் தகவல்களில் டிசம்பர் 15, 2019 தேதியிட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    பிப்ரவரி 16, 2020 அன்று ஜாமியா பெயரில் இயங்கும் அதிகாரப்பூர்வமற்ற ட்விட்டர் கணக்கில் சிசிடிவி வீடியோ ஒன்று லீக் ஆனது. வீடியோவிற்கு, "ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் மீது நடத்தப்படும் கொடுமை மற்றும் அராஜகத்தை பார்த்து தெரிந்து கொள்ளுஎங்கள். நூலகத்தில் படித்து கொண்டிருந்த மாணவர்கள் செய்யாத தவறுக்காக தாக்கப்படுகின்றனர்" எனும் தலைப்பில் பகிரப்படுகிறது.

    வைரல் ட்விட் ஸ்கிரீன்ஷாட்

    தற்சமயம் வைரலாகும் தகவல்களில் சிசிடிவி வீடியோ டிசம்பர் 15, 2019 தேதியில் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறது. இதே தினத்தில் நூலகத்தின் அருகில் உள்ள நியூ ஃபிரெண்ட் காலணியில் நடைபெற்ற கலவரத்தில் அடையாளம் தெரியாத போராட்டக்காரர்கள் பேருந்து மற்றும் மோட்டார்சைக்கிளை தீ வைத்து எரித்தனர்.

    இதே வீடியோ இணையத்தில் லீக் ஆனதைத் தொடர்ந்து இரு சிசிடிவி வீடியோக்களை ஒப்பிட்ட ட்விட்டர்வாசிகள் வீடியோக்களிலும் ஒரே நபர் தான் காணப்படுகிறார் என நினைத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து முந்தைய வீடியோவில் போலீசார் தாக்கிய மாணவர் தான் வீதியில் இறங்கி மோட்டார்சைக்கிளை தீ வைத்து எரித்தார் என இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

    இரு வீடியோக்களை கூர்ந்து பார்க்கும் போது, அவற்றில் ஒரே நிற ஆடையை அணிந்திருந்த மர்ம நபர்கள் இருவரும் முகத்தை கைதுண்டு மூலம் மூடியிருந்ததே இணையவாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியதாக தெரிகிறது. உண்மையில் வீடியோக்களில் ஒரு நபர் ஜாக்கெட் அணிந்திருக்கிறார், மற்றொரு வீடியோவில் உள்ள நபர், ஹூடி வகை ஆடையை அணிந்திருக்கிறார்.

    சிசிடிவி வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஜாக்கெட்டின் கைகளில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகள் உள்ளன. எனினும், ஜாமியா மாணவர் ஹூடியில் வெள்ளை நிற கோடு மட்டுமே காணப்படுகிறது. மேலும் இருவர் பயன்படுத்திய கைதுண்டுகள் வெவ்வேறாக காட்சியளிக்கிறது. ஒருவர் வெள்ளை நிறத்தையும், மற்றொருவர் நீல நிற துண்டை பயன்படுத்தியிருக்கிறார்.

    அந்த வகையில் வைரல் தகவல்களில் இருப்பதை போன்று தாக்குதலுக்கு ஆளான மாணவர் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைக்கவில்லை என்பது தெளிவாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×