search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
    X
    முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

    மராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தடுக்க மாட்டோம் - உத்தவ் தாக்கரே அறிவிப்பு

    மராட்டியத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை (என்.பி.ஆர்.) தடுக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.
    மும்பை:

    மத்திய அரசின் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சிகளும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன.

    மராட்டியத்திலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ள சிவசேனா குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து மக்களவையில் வாக்களித்தது.

    ஆனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

    இருப்பினும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களிடம் தவறான புரிதல் உள்ளதாக சிவசேனா தெரிவித்து வருகிறது. எனவே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு சிவசேனா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாரதீய ஜனதா வலியுறுத்தியது.

    அதே நேரத்தில் மத்திய அரசின் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மராட்டியத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார். ஆனால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மராட்டியத்தில் தடை இல்லை என்று அவர் நேற்று அறிவித்தார்.

    இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வேறு. குடியுரிமை திருத்தச் சட்டம் மராட்டியத்தில் அமல்படுத்தப்படும் என யாரும் கவலைப்பட வேண்டாம்.

    தேசிய குடிமக்கள் பதிவேடு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டால் அது மராட்டியத்தில் அமல்படுத்தப்படாது. இந்த சட்டத்தால் இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஆதிவாசி மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

    ஆனால் என்.பி.ஆர். என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறை தான். ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இது நடக்கும் போது யாரும் பாதிக்கப்படுவார்கள் என்று நான் கருதவில்லை. இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தேன். எனவே இதை மராட்டியத்தில் அமல்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. இதை நாங்கள் தடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை புதுப்பிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறுகிறது.

    அசாம் மாநிலம் தவிர்த்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணி நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.3,941 கோடியை ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×