search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஆன்லைன் மூலம் நெயில் பாலிஷ் ஆர்டர் செய்த பெண்ணிடம் ரூ.92 ஆயிரம் மோசடி

    புனே அருகே ஆன்லைன் மூலம் நெயில் பாலிஷ் ஆர்டர் செய்த பெண்ணிடம் ரூ.92 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புனே:

    மராட்டிய மாநிலம், புனே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந்தேதி தன்னுடைய மொபைல் வழியாக இணையத்தில் நெயில் பாலிஷ் ஒன்றை ஆர்டர் செய்தார்.

    நெயில் பாலிஷின் விலையான ரூ.388-ஐ தனியார் வங்கி கணக்கு ஒன்றுக்கு பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால், பொருள் கிடைக்க வேண்டிய தினத்தில் வரவில்லை என்பதால் இணையதளத்திற்குச் சொந்தமான வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார்.

    இதுதொடர்பாக சேவை மையத்தினர் இளம் பெண்ணிடம் பேசும்போது, ‘ஆர்டருக்கான பணம் இன்னும் எங்களுக்கு வரவில்லை என்பதால் பொருள் உங்களுக்கு அனுப்பப்படவில்லை. ஒருவேளை பணம் வந்தால் அதை உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பரிமாற்றம் செய்கிறோம்“ என்று கூறி உள்ளனர். மேலும், அவருடைய தொடர்பு எண்ணையும் கேட்டு வாங்கி உள்ளனர்.

    மொபைல் எண்ணை கொடுத்த சில மணிநேரங்களில் இளம்பெண்ணின் இரண்டு வெவ்வேறு தனியார் வங்கி கணக்கில் இருந்து ரூ.90,946-அடுத்தடுத்து 5 தவணையாக எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளன.

    அவருடைய பொதுவங்கி கணக்கு ஒன்றிலிருந்தும் ரூ.1500 எடுக்கப்பட்டுள்ளது. பணத்தை மீட்பதற்கு அவர் செய்த பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள வாகட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த டிசம்பர் 17-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்கள் மீது தகவல் தொழில் நுட்பச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இளம்பெண்ணின் கணக்கிலிருந்து மொத்தமாக ரூ.92,446 எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடைய வங்கிக்கணக்கு தொடர்பான எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என அவர் கூறுகிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×