search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் - காஷ்மீர் டிஜிபி

    காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.
    காஷ்மீர்:

    துணை ராணுவ படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி ராணுவ வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். 

    இவர்களின் 78 வாகனங்களும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

    இந்த வாகன அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட அவந்திப்போரா அருகே லேத்போரா என்ற பகுதியில் சென்றபோது திடீரென ஜீப் ஒன்றில் வெடிகுண்டுகளுடன் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் சி.ஆர்.பி.எப். வீரர்களின் வாகனம் மீது பயங்கரமாக மோதி வெடிக்கச்செய்தார்.

    கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் உடல் சிதறி பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் அடங்குவர். 

    உலகையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அதீல் அகமது தார் சம்பவத்தின்போதே உயிரிழந்தான்.

    புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த படையினருக்கு அஞ்சலி

    இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த பாதுக்காப்பு படையினரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் பிப்ரவரி 14-ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

    தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவு மண்டபத்தில் நடைபெற்ற அனுசரிப்பு நிகழ்ச்சியில் ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் பங்கேற்று வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு மரியாதை செலுத்தினார். 

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி கூறுகையில், ''கடந்த சில மாதங்களில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 

    மேலும், எல்லைவழியாக காஷ்மீருக்குள் அத்துமீறி நுழையவும் பயங்கரவாதிகள் முயற்சி செய்துவருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க எண்ணும் பயங்கரவாதிகளின் முயற்சிகளை பாதுகாப்பு படையினர் முறியடித்துவருகின்றனர். 

    புல்வாமா தாக்குதலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுவிட்டனர்’’ என அவர் தெரிவித்தார்.   
    Next Story
    ×