search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி
    X
    பிரதமர் நரேந்திர மோடி

    மொத்தம் இத்தனை பேர் தானா? பிரதமர் கருத்தால் கதறும் நெட்டிசன்கள்

    அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் மொத்தம் இத்தனை பேர் தான் அதிக வருவாய் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்தால் ட்விட்டர்வாசிகள் கதறல்.



    இந்தியாவில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக வருவாய் பெறுவதாக மொத்தம் 2200 பேர் தெரிவித்துள்ளனர் என்ற பிரதமர் மோடியின் கருத்து சமூக வலைதளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

    வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி 2018-19 நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக வருவாய் பெறுவதாக சுமார் 97,689 பேர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மோடி தெரிவித்த கணக்கில் 95489 பேர் எங்கு சென்றனர் என்ற வாக்கில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்தியாவில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக வருவாய் பெறுவோரில் ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கணக்காளர்கள் என குறிப்பிட்ட பிரிவில் 2200 பேர் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

    பா.ஜ.க. ட்விட் ஸ்கிரீன்ஷாட்

    பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வின் ட்விட்டர் கணக்கே காரணம். பா.ஜ.க.-வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.5 கோடி இந்தியர்கள் மட்டுமே வரி செலுத்துகின்றனர். இதில் மூன்று லட்சம் பேர் மட்டுமே தங்களது வருவாய் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் 2200 பேர் மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.’ எனும் தகவல் அடங்கிய ட்விட் செய்யப்பட்டது.

    மோடி உரையின் போது,‘நாட்டில் தொழில்ரீதியாக பல்வேறு துறைகளில் பலர் பணியாற்றி வருகின்றனர். ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், கணக்காளர்கள், என அவரவர் தங்களின் துறையில் சிறந்து விளங்குகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் இவர்களில் பலர் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசித்து வருகின்றனர், இவர்கள் நாட்டிற்கு அவரவர் நிலைகளில் பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். இவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், இத்தனை பெரிய நாட்டில், வெறும் 2200 பேர் மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளனர். டெல்லி உச்சநீதிமன்றத்தில் இதைவிட எண்ணிக்கை அதிகமாக இருக்கும்! அத்தனை பெரிய கார்கள், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் வெளிநாட்டில் கல்வி கற்கும் குழந்தைகளுடன் வசிப்போர் இருக்கும் போது இதை யார் நம்புவர்? வெறும் 2200.’  என தெரிவித்தார்.

    வருமான வரித்துறை ட்விட் ஸ்கிரீன்ஷாட்

    அந்த வகையில் வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வருமான வரி கணக்கில் தொழில்ரீதியாக எத்தனை பிரிவை சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர் என்பது குறித்து தெளிவான தகவலும் இல்லை. எனினும், வருமான வரித்துறை அறிக்கையில், 2018-19 நிதியாண்டில் தொழில்ரீதியாக பணியாற்றும் 2200 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாயில் வாடகை, வட்டி மற்றும் இதர வருவாய் அடங்காது.

    இவற்றை கொண்டு சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களின் படி பிரதமர் மோடி தெரிவித்த தகவல்கள் வருமான வரித்துறை வெளியிட்டவை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×