search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா (கோப்பு படம்)
    X
    அமித்ஷா (கோப்பு படம்)

    தேர்தல் பிரசாரத்தின் போது ‘துரோகிகளை சுடுங்கள்’ போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் - அமித்ஷா ஒப்புதல்

    டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசிய ‘தேசத்துரோகிகளை சுடுங்கள்’ போன்ற கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத்தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 

    பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு எந்த தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய அடியாக கருத்தப்படுகிறது.

    இதற்கிடையில், டெல்லியில் கடந்த 27-ம் தேதி நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக கட்சியை சேர்ந்த நட்சத்திர பேச்சாளரும், மத்திய மந்திரியுமான அனுராக் தாக்கூர் 'தேசத்துரோகிகளை சுடுங்கள்’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். 

    இவரது கருத்து அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் அனுராக் தாக்கூர் 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடைவிதித்தது.

    இந்நிலையில், டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

    அந்நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:-

    ''குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நான் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துவிட்டேன். இந்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை விட ஆதரவாக நடைபெறும் போராட்டங்களே அதிகம். குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவை தேர்தல் முடிவுகளை பிரதிபளிக்கவில்லை. 

    ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது சிஏஏ-க்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை குறித்து பேசும்போது  ‘தேசத்துரோகிகளை சுடுங்கள்’ போன்ற கருத்துக்கள் தெரிவித்ததை தவிர்த்திருக்கலாம். இந்த கருத்துக்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லி பிரசாரத்தில் அமித்ஷா (கோப்பு படம்)

    குடியுரிமை திருத்தச்சட்டம் முஸ்லிம் மக்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது இல்லை. இந்த சட்டம் எந்த வித பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. 

    சிஏஏ குறித்து என்னிடம் யார் வேண்டுமானாலும் விவாதம் நடத்தலாம். அதற்கு நான் தயாராக உள்ளேன். என்னுடன் விவாதம் நடத்த வருபவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன்.
        
    டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா? என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி மீது உரிய சட்ட விதிகள் பின்பற்றப்பட்டே பொது பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அங்கு வருபவர்களை அரசு தடுப்பதில்லை’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

    Next Story
    ×