search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    அனைத்து மத விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்- தலைமை நீதிபதி அறிவிப்பு

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது உள்பட அனைத்து மத விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி 61 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இச்சீராய்வு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இதனை 9 நீதிபதிகள் அமர்வு விசாரித்து இறுதி முடிவு எடுக்கும் என்று கூறியது.

    அதன்படி, இப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன்பு இந்த மனுக்கள் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

    தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி சபரிமலை வழக்குடன் மசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிப்பது பற்றியும், பிற மதங்களைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்த பார்சி இன பெண்களை வழிபாட்டு தலங்களில் அனுமதிப்பது குறித்தும், தாவூதிபோரா இன பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இந்த அமர்வு விசாரிக்கும் என்று கூறினார்.

    இதற்கு மூத்த வக்கீல் பாலி நாரிமன் உள்ளிட்ட வக்கீல்கள் சில கேள்விகள் எழுப்பினர். அனைத்து மத விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட்டு எந்த அளவு தலையிட முடியும் என்பது உள்ளிட்ட 7 கேள்விகளை முந்தைய 5 நீதிபதிகள் அமர்வு எழுப்பி இருந்தது.

    ஆனால் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையில் அனைத்து மத விவகாரங்கள் குறித்து அப்படியொரு தீர்ப்பை வழங்க முடியாது. இந்த 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மறு ஆய்வு மனுக்களை மட்டுமே விசாரிக்க முடியும். கேள்விகளை விசாரிக்க முடியாது என்று கூறினர்.

    சபரிமலை

    வக்கீல்களின் வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே இது தொடர்பாக 10-ந்தேதி (அதாவது இன்று) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி இருந்தார். அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே இந்த மனுக்கள் தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பித்தார்.அதன் விவரம் வருமாறு:-

    சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரம் மட்டுமின்றி அனைத்து மத வழிபாடு, சுதந்திரம் தொடர்பாக இந்த கோர்ட்டு விசாரிக்கும்.

    சபரிமலை கோவில் விவகாரம் தொடர்பான மனுக்களை 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது சரியே. இந்த 9 நீதிபதிகள் அமர்வு இது தொடர்பாக நாளை மறுநாள் முதல் விசாரணையை தொடங்கும்.

    மத விவகாரத்தில் எந்த அளவுக்கு பொதுநல வழக்குகள் தொடுக்க அனுமதிக்கலாம் என்பது குறித்தும் இந்த அமர்வு விசாரிக்கும்.

    மத வழிபாடுகளில் பெண்களுக்கான மத வழிபாட்டு உரிமை, சுதந்திரம் குறித்தும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உள்ளோம்.

    ஏற்கனவே 5 நீதிபதிகள் அமர்வு எழுப்பிய 7 கேள்விகள் குறித்தும் விசாரிக்கப்படும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அறிவித்துள்ளார்.
    Next Story
    ×