search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி சட்டசபை தேர்தல்
    X
    டெல்லி சட்டசபை தேர்தல்

    டெல்லியில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - நாளை வாக்குப்பதிவு

    புதுடெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பணிகளை மேற்கொண்டது. 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடத்தப்படும். 11-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என கடந்த மாதம் 6-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டின.

    மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தனித்தனியாக போட்டியிடுகிறது. மும்முனைப் போட்டியில் ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் கடுமையாக போராடி வருகின்றன.

    தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். ஆம் ஆத்மி மற்றும் பா.ஜனதா தலைவர்களால் காரசாரமான போட்டி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. பா.ஜனதா 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சியான லாலுவின் ரா‌‌ஷ்டீரிய ஜனதா தளம் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

    பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பா.ஜனதாவின் எம்.பி.க்கள் பலர் பிரசாரங்களில் ஈடுபட்டனர். சீமாபூரி பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்‌ஷா, சாலை பேரணியை மேற்கொண்டார். முண்டகா தொகுதியில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் செய்தார். இதேபோன்று, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மணி‌‌ஷ் சிசோடியா இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது.

    மாநிலத்தில் 1.4 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். 80.56 லட்சம் ஆண் வாக்காளர்கள், 66.36 லட்சம் பெண் வாக்காளர்கள் மற்றும் 815 திருநங்கை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 2.08 லட்சம் வாக்காளர்கள் 18-19 வயதுடையோர். 2.05 லட்சம் பேர் 80 வயதை கடந்தவர்கள் ஆவர்.

    மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 13,750 வாக்குச்சாவடிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இறுதிக்கட்ட பிரசாரம் நடந்த நிலையில் ‘‘டெல்லியின் முதல்-மந்திரியாகும் தகுதி பா.ஜனதாவில் யாருக்கும் கிடையாது’’ என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

    செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பேசிய கெஜ்ரிவால் கூறியதாவது:-

    டெல்லி முதல்-மந்திரியாக பா.ஜனதாவில் யாருக்கும் தகுதியில்லை. பாரதீய ஜனதா கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளர் யார் என்பதை அறிந்துகொள்ள மக்கள் விரும்புகின்றனர். அப்பதவிக்காக சம்பித் பத்ரா அல்லது அனுராக் தாக்கூரை தேர்வு செய்வார்களா?. டெல்லி தேர்தலை பிளவுப்படுத்த பா.ஜனதா முயற்சி செய்தது. அது வெற்றி பெறுமா? தோல்வியடையுமா? என்பது முடிவில் தெரியவரும். நல்ல கல்வி, மருத்துவ சிகிச்சை, நவீன சாலைகள், 24 மணி நேர மின்சார சேவையை விரும்புவோர் ஆம் ஆத்மியின் வாக்காளர்கள் ஆவர்.

    பா.ஜனதா தொடர்ந்து டெல்லி மக்களுக்கு தொந்தரவு கொடுக்கிறது. போராட்டங்கள் தொடர்பாக மோசமான அரசியலை செய்கிறது. பா.ஜனதா டெல்லியில் வாழும் குடிசைவாழ் மக்களை முற்றிலும் மறந்துவிட்டது. இப்போது, அங்கீகாரமற்ற குடிசைப்பகுதிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றன. ஆம் ஆத்மி ஆட்சிக்கு திரும்பினால் இலவசத்திட்டங்கள் அனைத்தும் தொடரும், தேவைப்பட்டால் இதுபோன்ற புதிய திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×