search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி
    X
    ரிசர்வ் வங்கி

    ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 5.15 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ)  மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

    அவ்வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு மீண்டும் கூடியது. 3 நாட்களாக நடைபெற்ற இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் வட்டி விகிதமானது (ரெப்போ) 5.15 சதவீதம் என்ற முந்தைய நிலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதேபோல் 2020-21ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த முடிவிற்கு ஆதரவாக, நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினர்களும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே, ஜூன் மாதத்திற்கு முன்பு வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. 
    Next Story
    ×