search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.
    X
    ஜி.எஸ்.டி.

    முதல் பரிசு ரூ.1 கோடி : ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதை ஊக்குவிக்க லாட்டரி திட்டம் - மத்திய அரசு முடிவு

    ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதை ஊக்குவிக்க, ‘ஜி.எஸ்.டி. லாட்டரி திட்டம்’ என்ற பெயரில் குலுக்கல் முறையில் ரூ.1 கோடி முதல் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரி அமல்படுத்தப்பட்டது. நான்கு அடுக்கு ஜி.எஸ்.டி.யின் கீழ், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

    இந்தியா முழுவதும், வணிக நிறுவனங்கள், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது, ரசீதுகள் என்கிற ‘பில்’ வாங்குவதன் மூலம், நாடு முழுவதிலும், ஜி.எஸ்.டி. வரி வசூலாகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் பில் இல்லாமல் பொருட்கள் வாங்குகின்றனர். இதனால் மத்திய அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் முறையாக வரி செலுத்தி பில்லோடு பொருட் கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், “ஜி.எஸ்.டி. லாட்டரி திட்டம்” என்ற பெயரில் குலுக் கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை பரிசு வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து மறைமுக வரிகளுக்கான மத்திய வாரியத்தின் இடைக்கால தலைவர் (சி.பி.ஐ.சி.) உறுப்பினரான ஜான் ஜோசப் கூறியதாவது:-

    நாங்கள் புதிய லாட்டரி குலுக்கல் முறையுடன் வந்துள்ளோம். இந்த ஜி.எஸ்.டி. லாட்டரி திட்டத்தின் மூலமாக ஜி.எஸ்.டி. வரியுடன் வாங்கும் ஒவ்வொரு பில்லும் வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி பரிசை வெல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேலும் இது ஜி.எஸ்.டி. வரி செலுத்த அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அமையும்.

    இந்த திட்டத்தின்படி, பொருட்கள் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்கள், மத்திய அரசு அறிவிக்கும் லாட்டரி சீட்டின் வலைத்தளத்தில் தங்கள் ரசீதை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மாதந்தோறும் குலுக்கல் முறையில், வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலுமான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், ஜி.எஸ்.டி. வரிக்கான ரசீதின் குறைந்தபட்ச மதிப்பை, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானிக்க உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் 28 சதவீத வரியை செலுத்த வேண்டுமா? என்று யோசிக்காமல், பரிசுத் தொகை கிடைக்கும் என்ற நோக்கத்தில் முறையாக வரி செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×