search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் - கோப்புப்படம்
    X
    கொரோனா வைரஸ் - கோப்புப்படம்

    கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதை செய்தால் போதுமா?

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள இதை செய்தால் போதும் என்ற வாக்கில் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் சக்தியை பூண்டு நீர் வழங்குவதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை பல நூறுகளை கடந்துவிட்ட நிலையில், இதுபற்றிய தகவல்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகிவிடுகிறது.

    அந்த வரிசையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளில், ‘நல்ல செய்தி, வூஹானின் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய ஒரு கப் சூடான பூண்டு நீர் போதும். பழைய சீன மருத்துவர் இதன் மகத்துவத்தை நிரூபித்து இருக்கிறார். பல நோயாளிகளும் இது பலனளிப்பதாக தெரிவித்துள்ளனர். சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட எட்டு பூண்டு பற்களை ஏழு கப் நீரில் கொதிக்கவிட வேண்டும்., பின் நீரை பருகி பூண்டு பற்களை உண்ண வேண்டும். ஒரு இரவில் பாதிப்பு சரி செய்யப்பட்டு விடும். இதனை பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இதே பதிவு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வைரலாகி இருக்கிறது. இதுபற்றிய பதிவுகள், சீன மருத்துவர் அறிவுரை படி பூண்டு நீர் பருகினால் உடல்நலம் சரியாகிவிடும் என்ற தலைப்பில் பகிரப்படுகிறது.

    பூண்டு நீர் பலன்கள் பற்றி ஆய்வு செய்ததில், பொதுவாக சளி தொல்லை ஏற்படும் போது பூண்டு நீர் பருகுவது எளிதில் சளியை போக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் சில பதிவுகளில் பூண்டு நீர் எளிமையான வீட்டு வைத்தியமாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

    உலக சுகாதார மையத்தின் விளக்கப்படம்

    பொதுவான சளி தொல்லைகளை சரி செய்ய பூண்டு நீர் சிறப்பான மருந்து என்றவாக்கில் பல்வேறு தகவல்கள் இணையத்தில் கிடைத்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பூண்டு நீர் உட்கொள்வது பற்றி எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்யவோ அல்லது பரவாமல் தடுக்கவோ எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என உலக சுகாதார மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் பூண்டு நீர் உட்கொள்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பகிர வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×