search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிப்பில்லை - நிர்மலா சீதாராமன்

    அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கப்பட மாட்டாது. ஆனால், அந்த வருமானத்தில் இங்கு வாங்கும் சொத்தின் வருமானத்துக்கு வரி விதிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நேற்று தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார். வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இருப்பினும், அயல்நாடுகளில் பணியாற்றியவாறோ, சொந்தமாக தொழில் நடத்தியவாறோ அங்கேயே வாழும் இந்தியர்களின் வருமானத்தின் மீதான வரிவிதிப்பு தொடர்பான தெளிவான விளக்கம் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்ற கருத்து சிலரிடையே எழுந்ததால் குழப்பநிலை நீடித்தது.

    இந்நிலையில், டெல்லியில் சில ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களின் வருமானத்துக்கு வரி  விதிக்கும் நோக்கம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

    ‘தற்போதைய நிலவரப்படி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் நமது நாட்டில் ஈட்டும் வருமானத்துக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. வரிவிதிப்பு நடைமுறைகள் அமலில் இல்லாத வேறு நாடுகளில் ஒருவர் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் சம்பாதித்ததாக வரிவிதிப்பு வரம்புக்குள் நான் ஏன் சேர்க்கப் போகிறேன்?.

    ஆனால், அந்த பணத்தில் வாங்கப்பட்டதாக அவர்களுக்கு இங்கே (இந்தியாவில்) ஒரு சொத்து இருந்து, அதை வாடகைக்கு விட்டு, அதன் மூலம் வருமானம் கிடைத்து, அவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்கள் என்ற காரணத்துக்காக அந்த வருமானத்துக்கு அங்கேயும் வரி செலுத்தாமல், இங்கேயும் வரி செலுத்தாமல் இருப்பதற்கு விட்டுவிட முடியாது.

    வருமானம் தரக்கூடிய சொத்து இந்தியாவில் அமைந்துள்ளதால் அதற்கான வருமான வரியை வசூலிக்கும் இறையாண்மைமிக்க உரிமை எனக்கு உண்டு.

    நீங்கள் துபாயில் சம்பாதிக்கும் பணத்துக்கு நான் வரி விதிக்கவில்லை. ஆனால், இந்தியாவில் உங்களுக்கு வாடகை வருமானத்தை தரும் சொத்துக்குத்தான் வரி விதிக்கிறேன். நீங்கள் அயல்நாடுவாழ் இந்தியராக இருக்கலாம். அங்கேயே வாழலாம், ஆனால், இங்குள்ள சொத்து உங்களுக்கு வருமானத்தை அளிப்பதால் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும்’ எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டின் ஒரு அம்சமாக ‘வரிவிதிப்பு முறை நடைமுறையில் இல்லாத நாடுகளில் வாழ்ந்து, அங்கு வரிவிதிப்புக்கு உள்ளாக்கப்படாத இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தியாவில் வாழும் குடிமக்களாகவே கருதப்படுவார்கள்’ என்ற அம்சம் இடம்பெற்றுள்ளது நினைவிருக்கலாம்.

    Next Story
    ×