search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னையா குமார்
    X
    கன்னையா குமார்

    மோடியும் அமித்ஷாவும் இந்து-முஸ்லிம் மோதலை உருவாக்குகின்றனர்: கன்னையா குமார்

    மோடியும் அமித்ஷாவும் இந்து-முஸ்லிம் இடையே மோதலை உருவாக்குகின்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கன்னையா குமார் கூறியுள்ளார்.
    மும்பை:

    குடியுரிமை திருத்த சட்டத்தைப்பற்றியும் அதற்கு எதிராகவும், ஆதரவாகவும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், பேரணிகள் பற்றி அனைவரும் அறிந்ததே. பல்வேறு இடங்களில் போராட்டங்களில் வன்முறையும் வெடித்தது. ஆனால் இந்த சட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில், மோடியும் அமித்ஷாவும் இந்து-முஸ்லிம் இடையே மோதலை உருவாக்குகின்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கன்னையா குமார் கூறியுள்ளார்.

    மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து  பேரணி நடைபெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான அப்துல்லா துரானி தலைமையில் நடைபெற்ற பேரணியில் கன்னையா குமார் பேசியதாவது:

    என்.ஆர்.சி எதிர்ப்பு பேரணி

    குஜராத் தேர்தலின் போது மோடியும் அமித்ஷாவும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்களை உருவாக்கினர். இப்போதும் அவர்கள் இதே யுக்தியை பின்பற்றுகிறார்கள். பொதுமக்கள் மதரீதியான மோதல்களை புறம் தள்ளி, வேலையின்மை மற்றும் பொருளாதாரத்தின் மோசமான நிலை குறித்து தற்போதைய அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும். 

    இந்த குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் மத்திய அரசு எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிறது. நாட்டில் நடைபெறும் பிரச்சினைகளை குறித்து யாரவது ஒருவர் கேள்வி எழுப்பினால், அரசு அவரிடம் குடியுரிமையைப் பற்றி கேள்வி எழுப்புகிறது. இந்த சட்டம் குடியுரிமை கொடுப்பதற்கு பதிலாக குடியுரிமையை பறிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×