search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ‘கொரோனா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கை- கேரளாவில் 436 பேருக்கு மருத்துவ பரிசோதனை

    வெளிநாடுகளில் இருந்து கேரளா வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 436 பேருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும் ‘கொரோனா’ வைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலும் ‘கொரோனா’ வைரஸ் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

    அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. கேரளாவில் கொச்சியில் சர்வதேச விமான நிலையம் அமைந்து உள்ளது.

    இந்த விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இங்கு வரும் பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே விமான நிலையத்தில் இருந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்த விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் முதலில் 5 பேர் மருத்துவ கண்காணிப்புக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்கள் 5 பேரும் கொச்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு ‘கொரோனா’ வைரஸ் தாக்குதல் உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக அவர்களது ரத்தமாதிரி புனேயில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு உள்ள ‘கொரோனா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கண்டறிவதற்காக மத்திய சுகாதாரத்துறை குழு ஒன்று கேரளா வந்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சவுகத் அலி, கேரள சுகாதாரத்துறை மந்திரி மற்றும் அதிகாரிகளுடன் ‘கொரோனா’ வைரஸ் தடுப்பு பற்றி அரசு எடுத்துள்ள நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறியதாவது:

    கேரளாவில் ‘கொரோனா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு செய்து உள்ளது. சீனா உள்பட வெளிநாடுகளில் இருந்து கேரளா வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் 436 பேருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதைத்தொடர்ந்து முதல்கட்டமாக 5 பேரின் ரத்தமாதிரிகள் பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்களில் யாருக்கும் ‘கொரோனா’ வைரஸ் அறிகுறி இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ‘கொரோனா’ வைரஸ் கேரளாவில் பரவாமல் இருக்க கொச்சி விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கட்டமாக திருவனந்தபுரம் விமான நிலையத்திலும் இன்று முதல் ‘கொரோனா’ வைரஸ் கண்டறியும் மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×