search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளுநரை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற சட்டசபை காவலர்கள்
    X
    ஆளுநரை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற சட்டசபை காவலர்கள்

    கேரள சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அமளி-வெளிநடப்பு

    கேரள சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன், ஆளுநரின் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். இச்சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என்றும் கூறினார்.





    சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, எதிர்கட்சியான காங்கிரஸ் ஆதரவுடன், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு கேரள கவர்னர் ஆரிப்முகமதுகான் கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்க்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.

    கேரள அரசு குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதற்கும் கவர்னர் கண்டனம் தெரிவித்தார். தனது அனுமதியில்லாமல் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியதோடு, கேரள தலைமை செயலாளரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.

    இதனால் அரசுக்கும், கவர்னருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.

    முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபு. கவர்னர் உரையில் அரசின் செயல்திட்டம் மற்றும் கொள்கை முடிவுகள் இடம் பெறும். அதன்படி இன்றைய கவர்னர் உரையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாநில அரசு எடுத்துள்ள முடிவுகள் குறித்தும் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தது.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் உரையில் இடம்பெற்றதற்கு கவர்னர் அதிருப்தி தெரிவித்தார். இதனால் கவர்னர் உரை நிகழ்த்தும்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்துக்களை அவர் வாசிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் இன்று காலை கவர்னர் ஆரிப் முகமதுகான் சட்டசபைக்கு வந்தார். அவரை முதல்-மந்திரி பினராயி விஜயன், சபாநாயகர் மற்றும் சட்ட மந்திரி பாலன் ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்துச் சென்றனர்.

    சபைக்குள் நுழைந்ததும், காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர். கவர்னரே திரும்பி போ, குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறு என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை உயர்த்தி கோ‌ஷம் எழுப்பினர். இந்த போராட்டம் 10 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சபைக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகரும், சட்ட மந்திரியும் சமரசம் செய்தனர். கவர்னரை உரை நிகழ்த்த அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எல்எல்ஏக்கள்

    போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் சமரசத்தை ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபை காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்களை அப்புறப்படுத்தினர்.

    சபை காவலர்கள் பாதுகாப்புடன் கவர்னர், சபாநாயகர் மாடத்திற்கு சென்றார். அங்கு உரை நிகழ்த்த தொடங்கினார். உடனே காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் சபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

    எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில், சபையை விட்டு வெளியேறிய எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை முன்பு அமர்ந்து கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர்.

    இதற்கிடையே சட்டசபையில் உரை நிகழ்த்திய கவர்னர், உரையில் இடம் பெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்துக்களையும் வாசித்தார்.

    அப்போது, இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இதனை அரசு தெரிவித்திருக்கிறது என்பதற்காகவும், முதல்-மந்திரி மீது வைத்துள்ள அபிமானம் காரணமாக வாசிப்பதாகவும் தெரிவித்தார்.


    Next Story
    ×