search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம்
    X
    கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம்

    சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தின்போது தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்த நபர் கைது

    ஜாமியா, அலிகார் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சிஏஏ-க்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்த ஷர்ஜீல் இமாம் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

    இதற்கிடையில், டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் டிசம்பர் 16-ம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் போது போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனான ஷர்ஜீல் இமாம் என்பவன் தேசத்திற்கு விரோதமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தான். 

    ஜேஎன்யூ பல்கலைகழகத்தின் பிஎச்டி மாணவனான இமாம் ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைகழகத்தில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது தேச விரோத கருத்து தெரிவித்துள்ளான். 

    போராட்டத்தின் போது இமாம் பேசுவது போன்று வெளியான இரண்டு வீடியோக்களில், '’5 லட்சம் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் நாம் இந்தியாவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களை நிரந்தரமாக பிரித்துவிடலாம். அப்படி நடக்காவிட்டாலும் குறைந்தது ஒன்றரை மாதங்களுக்காவது பிரித்துவிடலாம். 

    ஏர் போர்ஸ் ஒன் விமானத்தால் கூட ஒரு மாதத்திற்கு சுத்தம் செய்ய முடியாத அளவிற்கு ரெயில் தண்டவாளங்களிலும், சாலைகளிலும் கட்டைகள், குப்பைகள் என வீசுங்கள். 

    இந்தியாவில் இருந்து அசாமை துண்டாக்குவது நமது கடமை, அவ்வாறு செய்தால் மட்டுமே மத்திய அரசு நாம் சொல்வதை கேட்கும். அசாமில் உள்ள முஸ்லிம்களின் நிலைமை நமக்கு தெரியும். அவர்கள் அனைவரும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்’’ இவ்வாறு அவன் பேசியுள்ளான். 

    இந்த வீடியோகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து டெல்லி போலீசார் கடந்த 25-ம் தேதி ஷர்ஜீல் இமாம் மீது தேசத்துரோகத்தில் ஈடுபட்டது, மக்களை பிளவுபடுத்த முயற்சித்தல் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து அவனை தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்த விசாரணையின் போது கடந்த 25-ம் தேதி பீகாரில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஷர்ஜீல் இமாம் பங்கேற்றிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பீகார் விரைந்த டெல்லி போலீசார் இமாமின் தம்பி முசாமில் என்பவனிடம் இமாம் மறைவிடம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

    முசாமில் கொடுத்த தகவலின் அடிப்படையில் ககோ என்ற பகுதியில் பதுங்கியிருந்த இமாமை பீகார் போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் ஜஹானாபாத் தலைமை மாஜிஸ்திரேட் முன்னிலையிலொ ஆஜர்படுத்தப்பட்ட இமாமை 36 மணிநேரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

    இதையடுத்து கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாமை பீகார் போலீசார் விசாரணைக்காக டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
    Next Story
    ×