search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மும்பை புறநகர் ரெயில்களில் தினமும் சராசரியாக 66 செல்போன்கள் திருட்டு

    மும்பை புறநகர் ரெயில்களில் கடந்த ஆண்டு சராசரியாக தினமும் 66 செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
    மும்பை:

    இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு ரெயில்களே முக்கிய போக்குவரத்து சாதனமாக பயன்படுகிறது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்திய ரெயில்வே சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால், ரெயில்களில் பயணிகளின் உடைமைகள் பலவும் திருடர்களால் திருடப்படுகிறது. 

    குறிப்பாக பயணிகளின் செல்போன்கள் திருடர்களால் கண் இமைக்கும் நேரங்களில் திருடப்படுகிறது. இதனால் ரெயில் பயணிகள் தங்கள் செல்போனை பறிகொடுப்பது மட்டுமல்லாமல் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகின்றனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் ரெயில்களில் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து திருடர்களால் திருடப்பட்ட செல்போன்களின் விவரங்களை அறிக்கையாக ரெயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர். 

    அதில், மும்பை புறநகர் ரெயில்களில் தினமும் சுமார் 80 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். 2018-ம் ஆண்டு புறநகர் ரெயில்களில் 32,476 செல்போன் திருட்டு சம்பவங்கள் வழக்காக பதியப்பட்டுள்ளது. 

    கோப்பு படம்

    சராசரியாக ஒரு நாளைக்கு 88 செல்போன்கள் என்ற விகிதத்தில் திருட்டு நடைபெற்றுள்ளது. திருடப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு 3.09 கோடி ரூபாய் ஆகும். 

    அதேபோல் 2019-ம் ஆண்டு 24,010 செல்போன் திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 66 செல்போன்கள் என்ற விகிதத்தில் திருட்டு நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு மும்பை புறநகர் ரெயில்களில் திருடப்பட்ட செல்போன்களின் மொத்த மதிப்பு 2.99 கோடி ரூபாய் ஆகும்.  

    ரெயில்வே போலீசாரால் வழக்கு பதியப்பட்ட திருட்டு சம்பவங்களில் 2018-ம் ஆண்டு 2,517 செல்போன்களும், 2019-ம் ஆண்டு 2,319 செல்போன்களும் திருடர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. 

    இரண்டு ஆண்டுகளும் பயணிகளிடமிருந்து திருடப்பட்டு வழக்காக பதியப்பட்ட மொத்த செல்போன் திருட்டு சம்பவங்களில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான செல்போன்களே, ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×