search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    டெல்லி வந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?

    டெல்லி வந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என்று அவர்களை மருத்துவ மனைகளில் தனி அறைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

    புதுடெல்லி:

    சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரைப் பறித்துள்ள கோரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வந்து விடக்கூடாது என்பதில் மத்திய அரசு மிக, மிக உஷாராக உள்ளது.

    சீனாவில் இருந்து இந்தியா வரும் எல்லா பயணிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய சுமார் 30 ஆயிரம் பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    சீனாவில் இருந்து வருபவர்களில் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் கூடுதல் பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்களுக்கு காய்ச்சல், ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்கள் மருத்துவ மனைகளில் தனி அறைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

    டெல்லி, மும்பை, ஐதராபாத், எர்ணாகுளம் உள்பட பல நகரங்களில் சுமார் 20 பேர் தனி அறையில் வைக்கப்பட்டனர். அவர்களது ரத்தம் பரிசோதிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்று கண்டறியப்பட்டுகிறது.

    இந்த நிலையில் நேற்று சீனாவில் இருந்து டெல்லி திரும்பியவர்களில் 3 பேர் தும்மல், இருமல், காய்ச்சலுடன் இருந்தனர். அந்த 3 பேரும் டெல்லி ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் தனித் தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல் நிலையை டெல்லி டாக்டர்கள் குழு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    கொல்கத்தாவுக்கு வந்த சீனா சுற்றுலா பயணி ஒருவரும் காய்ச்சலுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாய்லாந்து பெண் ஒருவரும் கொரோனா வைரஸ் அறிகுறி சந்தேகத்துடன் கொல்கத்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பீகார் மாநில தலைநகர் பாட்னாவிலும் நேற்று ஒருவர் வைரஸ் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். ஜெய்ப்பூர், சண்டிகர் நகரங்களிலும் 2 பேர் ஆஸ்பத்திரி தனி அறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஐதராபாத்தில் நேற்று 4 பேர் கொரோனா வைரஸ் அறிகுறி சந்தேகத்துடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் அறிவியல் விஞ்ஞானி ஆவார். சீனாவில் இருந்து அவர்கள் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் வந் திருந்தனர்.

    இதற்கிடையே சீனாவில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டாலும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×