search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்பி
    X
    செல்பி

    ஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் உயிரிழப்பு

    மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் உயிரிழந்தார். மற்றொரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் மெயினாகுரி மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    நேற்று அவர்களில் சுமார் நூறு பேர் ஓடுலாபரி என்ற நகரில் உள்ள நதிக்கரைக்கு சுற்றுலா சென்றனர்.

    பெரும்பாலான மாணவிகள் நதிக்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது 2 மாணவிகள் அந்த பகுதியில் உள்ள ரெயில் பாலத்துக்கு சென்றனர். ரெயில் பாலத்தில் தொங்கியபடி ரெயில் வரும்போது செல்பி எடுக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டனர்.

    அந்த சமயத்தில் சிலிகுரி நகரில் இருந்து அலிப்பூர்தூர் நகருக்கு பயணிகள் ரெயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. பாலத்தில் நின்று கொண்டிருந்த 2 மாணவிகளும் அந்த ரெயில் முன்பு தொங்கியபடி படம் வரும் வகையில் ‘செல்பி’ எடுக்க முயற்சி செய்தனர்.

    ரெயில் அருகே வந்தபோது சுழன்று அடித்த காற்று வேகத்தில் ஒரு மாணவி சற்று நகர்ந்து உள்ளே சென்று விட்டார். வேகமாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. சற்று தூரம் இழுத்து செல்லப்பட்ட அந்த மாணவியின் உடல் சிதறி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் விழுந்தது. சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார்.

    முன்னதாக ரெயில் அருகில் வந்ததும் பயந்து போன மற்றொரு மாணவி அலறியபடி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார். தண்ணீர் குறைவாக இருந்ததால் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு நதிக்கரை ஓரம் அமர்ந்திருந்த அவர்களது தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாலம் பகுதிக்கு ஓடி வந்து பார்த்தபோது மாணவி பலியானதும், மற்றொரு மாணவி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பது தெரிய வந்தது.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×