search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    27-ந் தேதி முதல் மும்பை ‘தூங்கா’ நகரமாகிறது - வணிக வளாகம், ஓட்டல்கள் 24 மணி நேரமும் இயங்கும்

    மும்பையில் வருகிற 27-ந் தேதி முதல் வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் 24 மணி நேரமும் இயங்க மராட்டிய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
    மும்பை:

    இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நகரமான மும்பை இனி ‘தூங்கா’ நகரமாக இருக்கும்.

    வருகிற 27-ந் தேதி முதல் அங்கு வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் 24 மணி நேரமும் இயங்கும். இதற்கு மராட்டிய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

    இது தொடர்பாக மராட்டிய சுற்றுலா துறை மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியதாவது:-

    லண்டன் நகரை போலவே மும்பையிலும் 24 மணி நேரமும் வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் வருகிற 27-ந் தேதி முதல் திறந்து இருக்கும்.

    பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பதால் மராட்டிய மந்திரி சபை இந்த கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 5 லட்சம் மக்கள் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.

    அதே சமயம் இரவு நேரத்தில் அனைத்து கடைகளும் பொழுது போக்கு மையங்களும், வணிக வளாகங்களும் திறந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இரவில் கடைகளை திறந்து வைத்தால் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்று யார்-யார் கருதுகிறார்களோ அவர்கள் கடையை திறக்கலாம்.

    முதல் கட்டமாக குடியிருப்புகள் அல்லாத பகுதிகளில் இருக்கும் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் இரவு நேரத்தில் திறந்து இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் போலீசாரின் பணி சுமை நிச்சயமாக அதிகரிக்காது. தற்போது கடைகள் அனைத்தும் நள்ளிரவு 1.30 மணிக்குள் மூடப்படுகிறதா என்பதை அவர்கள் சோதித்து வந்தார்கள். இனி அந்த வேலை அவர்களுக்கு இருக்காது. எனவே சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் அவர்கள் ஈடுபடலாம்.

    அதே நேரத்தில் பப்கள் மற்றும் பார்கள் வழக்கம் போல் நள்ளிரவு 1,30 மணிக்கு மூடப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

    மக்கள் இனி இரவு நேரத்திலும் சாப்பிடலாம். கடைக்கு சென்று ஷாப்பிங் செய்யலாம். திரைப்படம் பார்க்கலாம். ஏனென்றால் மும்பை இனி 24 மணி நேரமும் இயங்கும் நகரமாகி உள்ளது.

    இவ்வாறு ஆதித்யதாக்கரே கூறியுள்ளார்.

    Next Story
    ×