search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி (சித்தரிப்பு படம்)
    X
    சிறுமி (சித்தரிப்பு படம்)

    3ம் வகுப்பு குழந்தைக்கு 450 தோப்புக்கரணம் தண்டனை - டியூசன் ஆசிரியை மீது வழக்கு பதிவு

    மகாராஷ்டிராவில் வீட்டுப்பாடத்தை முடிக்காத 3ம் வகுப்பு குழந்தைக்கு 450 தோப்புக்கரணங்கள் தண்டனை அளித்த டியூசன் ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    தானே:

    மகாராஷ்டிராவின் தானே நகரில் உள்ள மிரா சாலை பகுதியைச் சேர்ந்த 3ம் வகுப்பு சிறுமி அதே பகுதியில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு (டியூசன்) சென்று வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று டியூசன் சென்று வந்த சிறுமி மிகவும் சோர்வாகவும், கால்கள் வீங்கிய நிலையிலும் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து பதறிப்போன பெற்றோர் அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். 

    வீட்டுப்பாடத்தை முழுமையாக செய்து முடிக்காததால் டியூசன் ஆசிரியை (லதா) அந்த சிறுமியை 450 முறை உட்கார்ந்து எழுமாறு (தோப்புக்கரணம் போடுமாறு) கூறியுள்ளார். இதனாலேயே குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரிய வந்த பெற்றோர் அந்த ஆசிரியை மீது போலீசில் புகாரளித்தனர். 
     
    ‘இந்த சம்பவம் தொடர்பாக டியூசன் ஆசிரியை லதா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 324 மற்றும் சிறார் விதிகள் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என போலீசார் தெரிவித்தனர் 

    இதற்கு முன்னதாக ஒருமுறை வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தினால் இதே சிறுமியை லதா குச்சியால் அடித்ததாக அவர் மீது சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


    Next Story
    ×