search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மனைவி கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பித்த நபர் - கோர்ட் விடுதலை செய்தது ஏன்?

    டெல்லியில் கணவன் மீது மனைவி அளித்த கற்பழிப்பு புகாருக்கு நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு வழங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் ஒரு பெண் தன்னை ஒருவர் கற்பழித்து விட்டதாக 2016-ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னை தனது கணவரே கற்பழித்துவிட்டார் என பரபரப்பான குற்றச்சாட்டு வைத்துள்ளார்.  இதுதொடர்பாக அந்த பெண் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:-

    பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அப்பெண் 2.11.2015 ஆம் ஆண்டு அவர் வசித்துவந்த பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். 

    ஆனால் திருமணமான சில மாதங்களின் தனது கணவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் என்ற உண்மை அப்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. 

    இதையடுத்து தனது கணவருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் அவரை விட்டு பிரிந்து பஞ்சாப்பில் இருந்து வெளியேறி தலைநகர் டெல்லியில் வசித்து வந்துள்ளார். 

    ஆனால், அப்பெண்ணின் கணவரோ தனது மனைவி டெல்லியில் இருப்பதை கண்டுபிடித்து அவரிடம் சென்றுள்ளார். மேலும், தான் திருட்டு தொழிலில் இருந்து விலகி தற்போது திருந்தி வாழ்ந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

    அவரின் உத்திரவாதத்தை நம்பிய அப்பெண் தனது கணவருடன் இணைந்து இல்லற வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த நபர் தனது மனைவி வீட்டில் வைத்திருந்த 2 லட்ச ரூபாயை திருடியுள்ளார். 

    இதையடுத்து சொந்த பணத்தையே திருடிய கணவருடன் அப்பெண் இணைந்து வாழ மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அந்நபரோ தனது மனைவியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துள்ளார். 

    கோப்பு படம்

    இதனால் 2016 ஜூலை 5-ம் தேதி தனது கணவர் கற்பழித்து விட்டதாக அப்பெண் போலீசில் புகார் அளித்தார். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நபரை போலீசார் கைது செய்தனர்.  

    இந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த போது சிறையை விட்டு வெளியே வந்த அந்நபர் தனது மனைவியுடன் மீண்டும் பலமுறை உடலுறவில் இருந்துள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டப்பட்டவரை 2015 நவம்பர் 2-ம் தேதிக்கு முன்னதாகவே திருமணம் செய்தது பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் இருந்து உறுதியாகியுள்ளது. 

    பஞ்சாப்பிலும், டெல்லியில் குடியேறிய பின்னரும் பெண்ணின் சம்மதத்துடன் தம்பதிகள் உடலுறவில் இருந்துள்ளனர். 2 லட்ச ரூபாய் திருட்டு சம்பவத்திற்கு பின்னர்தான் குற்றச்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துள்ளார். 

    ஆனால், அப்போதும் பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டப்பட்டவரின் மனைவி என்பதால் இது கற்பழிப்பு புகாராக எடுத்துக்கொள்ளப்படாது என நீதிபதி தீர்ப்பளித்தார். 

    மேலும், மனைவி தொடர்ந்த கற்பழிப்பு வழக்கில் இருந்து குற்றச்சாட்டப்பட்ட கணவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×