search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காள சட்ட சபையில் 27-ந்தேதி தீர்மானம்

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காள சட்டசபையில் வருகிற 27-ம் தேதி தீர்மானம் கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கொல்கத்தா:

    மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதேபோல தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன.

    கேரளா, மேற்குவங்காளம் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் என 11 மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல் படுத்தமாட்டோம் என்று அறிவித்துள்ளன.

    கேரளா மற்றும் பஞ்சாப் சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தது.

    இந்தநிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்காள அரசும் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருகிறது. வருகிற 27-ந்தேதி அந்த மாநில சிறப்பு சட்டசபை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது.

    இதுகுறித்து மேற்கு வங்காள மந்திரி பரதா சட்டர்ஜி கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காள சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இதற்காக வருகிற 27-ந்தேதி சிறப்பு சட்டசபை கூட்டப்படுகிறது.

    அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற உதவுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் அப்துல் மேனனிடம் (காங்கிரஸ்) தெரிவித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேற்குவங்காள சட்ட சபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. சுவாதின் சர்கார் கூறியதாவது:-

    எங்களது எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அதே தினத்தில் இந்த சட்டத்தை ஆதரித்து பேரணியும் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    294 உறுப்பினர் கொண்ட மேற்குவங்காள சட்ட சபையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 210 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 42 பேரும், இடதுசாரிகளுக்கு 28 பேரும் இருக்கிறார்கள்.

    பா.ஜனதாவுக்கு 14 உறுப்பினர் மட்டுமே உள்ளனர். இதனால் சட்ட சபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் எளிதாக நிறைவேற்றப்படும்.
    Next Story
    ×