search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை- வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

    மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது. மேலும் இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட உள்ளன.
    புதுடெல்லி:

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த மனுக்கள் கடந்த மாதம் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 144 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.

    கோப்புப்படம்

    அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை தொடங்குவதற்கு முன்பாக, இந்த வழக்கில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார்.

    ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமாக உத்தரவு பிறப்பிக்கப் போவதில்லை என்று தலைமை நீதிபதி பாப்டே  கூறினார்.

    மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என்றும், இதற்காக 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×