search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மர்ம நபர் புகைப்படம்
    X
    மர்ம நபர் புகைப்படம்

    மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தவரை பிடிக்க அதிரடி வேட்டை

    மங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைத்தது தொடர்பாக துப்பு கிடைத்துள்ளது என்றும் இந்த சதியின் பின்னால் இருப்பவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
    மங்களூர்:

    கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு டிக்கெட் கவுண்டர் அருகே கார்கள் நிற்கும் இடத்தில் ஒரு பை நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைந்து வந்தனர். பயணிகளையும், ஊழியர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் விமான நிலையம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

    வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையத்துக்கு விரைந்து வந்து அனாதையாக கிடந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அதில் 3 வெடிகுண்டு இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விமான நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    வெடிகுண்டு இருந்த பையை விமான நிலையத்தில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள காலி மைதானத்துக்கு எடுத்து சென்றனர். அங்கு வைத்து வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர்.

    விமான நிலையத்தில் மேலும் வெடிகுண்டு இருக்கலாம் என்று கருதி தீவிர சோதனை நடத்தப்பட்டது. பயணிகளும், அவரது உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பரபரப்பால் விமான சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் வெடிகுண்டு பையை வைத்த நபர் யார் என்று கண்டு பிடிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் வந்து வெடிகுண்டு பையை விமான நிலையத்துக்குள் வைத்து சென்றது தெரிய வந்தது.

    அவர் தொப்பி அணிந்தபடி விமான நிலையத்துக்குள் வரும் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்தும், பயணிகள் அளித்த தகவலின் அடிப்படையிலும் மர்ம நபர் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    அந்த நபரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    விமான நிலையத்துக்குள் வெடிகுண்டை வைத்து சென்ற மர்ம நபரை பற்றி தெரிந்தால் உடனே பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைத்தது தொடர்பாக துப்பு கிடைத்துள்ளது. இந்த சதியின் பின்னால் இருப்பவர்கள் விரைவில் பிடிபடுவார்கள்” என்றனர்.

    இதற்கிடையே வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சமயத்தில் மங்களூரில் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போனில் பேசிய மர்ம நபர் விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்றும் நடுவானில் வெடித்து சிதறும் என்றும் கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதையடுத்து விமானம் அவசரமாக மங்களூரில் தரை இறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவங்களால் மங்களூரில் நேற்று பெரும் பதட்டம் நிலவியது.

    வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளதால் மங்களூர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. பயணிகளும் அவர்களது உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    Next Story
    ×