search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா பல்கலைக்கழகம்
    X
    கோவா பல்கலைக்கழகம்

    கோவா பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆப்கானிஸ்தான் மாணவருக்கு கத்திக்குத்து

    கோவா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவரை மர்ம கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பனாஜி:

    கோவாவின் டோனா பாலா பகுதியில் கோவா பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மதியுல்லா அரியா (வயது 24) என்பவர் எம்.காம் பயின்று வருகிறார்.

    நேற்று மதியம் கல்லூரி வளாகத்தின் அருகே இருந்த மதியுல்லாவை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து கோவா பல்கலைக்கழக வெளிநாட்டு மாணவர்கள் சங்க இயக்குநர் ராகுல் திரிபாதி போலீசில் புகார் அளித்தார்.

    புகாரை விசாரித்த போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சதீஷ் நீல்காந்தே என்பவரை கைது செய்துள்ளனர். 

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 326ன் (பயங்கரமான ஆயுதங்கள் மூலம் வேண்டுமென்றே கடுமையான ஆபத்தை விளைவிப்பது) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’, என தெரிவித்தனர்

    இச்சம்பவத்தை அடுத்து, ஜே.என்.யூவில் நடந்தது போன்று சூழ்நிலைகள் மாறக்கூடும் என மாணவர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளதாகவும், போலீஸ் பாதுகாப்பு மற்றும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் கோவா தலைவர் அஹ்ராஸ் முல்லா, மாநில கவர்னர் சத்யா பாலுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×