search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திர சட்டசபை
    X
    ஆந்திர சட்டசபை

    3 தலைநகர் மசோதா விவகாரம்- ஆந்திர சட்ட மேலவையின் அதிகாரம் என்ன?

    ஆந்திர மாநில 3 தலைநகர் தொடர்பான மசோதா ஆந்திர சட்டமேலவையில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி உருவாக்கப்பட்டது. இந்நிலையில், அதை சட்டசபை தலைநகராக வைத்துக்கொண்டு, நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம், நீதித்துறை தலைநகராக கர்னூல் என 3 தலைநகரங்களை உருவாக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அமராவதியை உருவாக்க நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்ய ஆந்திர சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 3 தலைநகரங்களை உருவாக்கும் மசோதாவை, சட்டசபையில் நிதி மந்திரி புக்கனா ராஜேந்திரநாத் தாக்கல் செய்தார்.

    ஜெகன்மோகன் ரெட்டி

    இந்த மசோதா குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உரையாற்றியபோது எதிர்ப்பு  தெரிவித்து, தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர்.  இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் 3 தலைநகரங்களை உருவாக்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது. மேலும், சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 17 தெலுங்குதேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    3 தலைநகர் தொடர்பான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இன்று சட்ட மேலவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 151 எம்எல்ஏக்கள் இருப்பதால் மசோதா எளிதில் நிறைவேறியது. ஆனால் 58 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டமேலவையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். தெலுங்கு தேசம் கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே மேலவையில் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்றுவதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

    அதேசமயம், இந்த சட்ட மசோதாவை சட்ட மேலவை நிராகரித்தால் மீண்டும் சட்டசபை ஒப்புதல் அளித்து சட்ட மேலவைக்கு அனுப்பி வைக்கும். இரண்டாவது முறை சட்டமேலவையானது, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். அப்படியே நிராகரிக்கப்பட்டாலும், சட்ட மசோதா நிறைவேறியதாகவே கருதப்படும்.

    சட்ட மேலவையால் மசோதாவை நிறைவேற்றுவதில் காலதாமதம் மட்டுமே செய்ய முடியும். முதல் முறை மசோதா மீது முடிவெடுப்பதில் 3 மாத காலமும், இரண்டாவது முறை வரும்போது ஒரு மாதமும் காலம் கடத்த முடியும். நிதி மசோதாக்களை பொருத்தவரை சட்ட மேலவைக்கு நிறைவேற்று அதிகாரம் கிடையாது. ஆலோசனை மட்டுமே வழங்க முடியும். எனவே, எதிர்க்கட்சிகள் சட்ட மேலவையில் நிறைவேற்ற விடாமல் காலம் கடத்தினாலும், அந்த வெற்றியால் எந்த பயனும் இல்லை.

    Next Story
    ×